மட்டக்களப்பு, அம்பாறை சமபோஷ கால்பந்து தொடரின் சம்பியனாக மருதமுனை அல்-மதீனா

249

சமபோஷவின் அனுசரணையோடு 14 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாடசாலைகள் இடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மருதமுனை அல்-மதீனா கல்லூரி, ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலத்தினை பெனால்டியில் 4-3 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

சோண்டர்ஸை வீழ்த்தி தொடர்ந்து 3ஆவது முறை ஏப்.ஏ கிண்ண சம்பியனான இராணுவப்படை

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியோடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த கால்பந்து தொடர் நிந்தவூர் பொதுமைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலநிலை சீர்கேடு காரணமாக பின்னர் சவளகடை அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் கால்பந்து விளையாட்டினை விருத்தி செய்யும் நோக்கோடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இத்தொடரில் 14 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தன.

தொடரின் முதற்சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய மருதமுனை அல்-மதீனா கல்லூரி அதில் இறக்காமம் அல்அஷ்ரப் வித்தியாலத்தினை 1-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுமுனையில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலம் மருதமுனை புலவர்மணி சரிபுத்தின் வித்தியாலயத்தினை அரையிறுதிப் போட்டியில் 2-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

சனிக்கிழமை (1) மாலை ஆரம்பமாகிய தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஒன்றினைப் பெறுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் மருதமுனை அல்-மதீனா கல்லூரி முதற்பாதி முடிவு நேரத்தில் கோல் ஒன்றினை பெற்றது.

Photos : Sri Lanka School Football Association Tournament (Under 14) – Batticaloa & Ampara

எனினும், மைதான நடுவர்கள் இந்த கோல் ஓப் சைட் திசையில் பெறப்பட்ட கோல் என அறிவித்தனர். இதனால் குறித்த கோல் செல்லுபடியற்றதாக மாறியிருந்தது. இதன் பின்னர் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் கோல்கள் பெறுவது கடினமாக இருந்தது.

இதன் காரணமாக, போட்டி சமநிலையில் நிறைவடைய தொடரின் சம்பியன் அணியை தீர்மானிக்க பெனால்டி முறையை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது.

பெனால்டி முறையில் வழங்கப்பட்ட முதல் வாய்ப்பில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம் கோல் போட்டது. எனினும், முதல் வாய்ப்பில் மருதமுனை அல்-மதீனா கல்லூரியினர் கோல் பெறவில்லை.

தொடர்ந்து இரண்டாவது பெனால்டி சந்தர்ப்பத்தில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலம் கோல் பெறத்தவறிய நிலையில் மருதமுனை அல்-மதீனா கல்லூரி கல்லூரி தமது முதல் கோலினைப் பெற்றது.

இரு அணிகளும் கோல்களில் 1-1 என சமநிலை அடைந்த பின்னர் மூன்றாவது பெனால்டி சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது சந்தர்ப்பத்தில் மீண்டும் கோல் பெறுவதனை ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலம் தவறவிட மருதமுனை அல்மதீனா கல்லூரி மீண்டும் ஒரு கோலினைப் பெற்று தமது முன்னிலையை 2-1 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் அதிகரித்துக் கொண்டது.

பின்னர் நான்காவது பெனால்டி சந்தர்ப்பத்தில் முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் கோல் பெறத் தவறிய ஏறாவூர் மாக்கான் மாக்கார் கல்லூரி தமது இரண்டாவது கோலினைப் போட மறுமுனையில் மருதமுனை அல்-மதீனா கல்லூரியும் தமக்கான கோலினைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலை அடைந்தது.

இறுதியாக ஐந்தாவதும் இறுதியுமான பெனால்டி சந்தர்ப்பத்தில் இரு அணிகளும் தங்களது வாய்ப்புகளுக்கான கோல்களை பூர்த்தியாக்கிய போதிலும் அதிக கோல்கள் பெற்ற அணியாக மொத்தமாக 4 கோல்களுடன் மருதமுனை அல்-மதீனா கல்லூரி சம்பியன் பட்டத்தினை வென்றது. இதேநேரம், ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலம் 3 கோல்களுடன் இறுதிப் போட்டியில் தோல்வியினை தழுவியது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அணிகளுக்கான கால்பந்து தொடரில் வெற்றி பெற்றிருக்கும் மருதமுனை அல்-மதீனா கல்லூரி அணி சமபோஷவின் தேசிய ரீதியாக இடம்பெறவுள்ள 14 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கான கால்பந்து தொடருக்கு தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க