இலங்கை A அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

Pakistan A tour of Sri Lanka 2021

220
Rumesh Rathnayake

பாகிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்காக, இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான தொடர், எதிர்வரும் மாதம் 28ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

>> கொரோனா தடுப்பூசி தொடர்பில் தசுன் ஷானகவின் கோரிக்கை

இந்தநிலையில், இலங்கை A அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ருமேஷ் ரத்நாயக்க இதற்கு முன்னர், இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை A அணியின் பயிற்றுவிப்பாளராக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் உள்ள இலங்கை அணியின் உயர் செயற்திறன் மையத்தில், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் A அணி, இலங்கைக்கு எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி வருகைத்தரவுள்ளதுடன், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் நடைபெறவுள்ளன.

இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள், கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகளுக்கான மைதானம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இந்தப்போட்டிகள் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த தொடரின் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில், மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான ஆயத்தமாக, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, லசித் எம்புல்தெனிய மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை A  – பாகிஸ்தான் A தொடருக்கான போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
ஒக்டோபர் 28-31 முதல் 4 நாள் போட்டி பல்லேகலை
நவம்பர் 4-7 2வது 4 நாள் போட்டி பல்லேகலை
நவம்பர் 10 முதல் ஒருநாள் உறுதியாகவில்லை
நவம்பர் 12 2வது ஒருநாள் உறுதியாகவில்லை
நவம்பர் 15 3வது ஒருநாள் உறுதியாகவில்லை

>> லும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<