பசிந்து மற்றும் கவிந்துவின் அபார ஆட்டத்தால் மீண்டெழுந்த றோயல் கல்லூரி

368

கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 139ஆவது நீல நிறங்களின் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (10) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்தது. இதில் றோயல் கல்லூரிக்காக அணித்தலைவர் பசிந்து சூரியபண்டார மற்றும் கவிந்து மதரசிங்க துடுப்பாட்டத்தில் அசத்த, பந்துவீச்சில் புனித தோமியர் கல்லூரியின் கலன பெரேரா மற்றும் டெல்லோன் பீரிஸ் ஆகியோர் அபாரம் காட்டியிருந்தனர்.

நேற்றைய நாள் (9) ஆட்ட நேர நிறைவின்போது 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்த நிலையில், இன்று தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை றோயல் கல்லூரி அணியினர் தொடர்ந்தனர்.

மனுல பெரேராவின் அபார பந்துவீச்சினால் முதல் நாள் றோயல் வசம்

இன்றைய நாளை நிதானமாக ஆரம்பித்த றோயல் கல்லூரியின் அணித் தலைவர் பசிந்து சூரிய பண்டார மற்றும் கவிந்து மதரசிங்க ஜோடி 4ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாக பெற்று, றோயல் கல்லூரிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

எனினும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பசிந்து சூரிய பண்டார 46 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கலன பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் பசிந்து ஒரு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 46 ஓட்டங்களை றோயல் கல்லூரிக்காக பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து றோயல் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சை களத்தில் நின்ற கவிந்து மதரசிங்க மற்றும் புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த தெவிந்து சேனாரத்ன ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர்.

எனினும், பவித் ரத்னாயக்கவின் பந்துவீச்சில் கவிந்து மதரசிங்க 37 ஓட்டங்களுடன் றோயல் கல்லூரியின் 5ஆவது விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து அவ்வணியின், இடதுகை சுழல் பந்துவீச்சாளரான டெல்லோன் பீரிஸ், தெவிந்து சேனாரத்ன(13), கவிந்து பத்திரன்ன (11), லஹிரு மதுஷங்க(12) ஆகியோரின் விக்கெட்டுக்களை 24 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து கைப்பற்ற, 139 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு றோயல் கல்லூரி தள்ளப்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட புகைப்படங்களைப் பார்வையிட

இதற்கிடையில் மழை காரணமாக போட்டி பிற்பகல் 2 மணிக்கு நிறுத்தப்பட்ட போது றோயல் கல்லூரி, 9 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியிருந்தது.

இதனையடுத்து தேநீர் இடைவேளையின் பிறகு மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது இறுதி விக்கெட்டுக்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிமால் விஜேசேகர மற்றும் மனுல பெரேரா ஜோடி பெறுமதியான 27 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஓரளவு உதவினர்.

எனினும், டெல்லோன் பீரிஸின் பந்துவீச்சில் டிமால் விஜேசேர 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்க, றோயல் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

றேயால் கல்லூரிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்திருந்த புனித தோமியர் கல்லூரி, இதன்போது 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியிருந்தனர். இதில் அவ்வணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலன பெரேரா 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் டெல்லோன் பீரிஸ் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் 2ஆம் நாள் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் 12 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

ஸ்கோர் விபரம்

போட்டியை மீண்டும் பார்வையிட