சூர்யகுமார் யாதவ்விற்கு பந்துவீச அச்சப்படும் ஹர்திக் பாண்டியா!

Sri Lanka Tour of India 2022

83

நான் மட்டும் சூர்யகுமார் யாதவ்விற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய T20i அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக கடந்த சனிக்கிழமை (07) நடந்த மூன்றாவது T20i போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை 2க்கு 1 என்ற அடிப்படையில் வென்ற இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து பதினோராவது முறையாக T20i தொடரை வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ஓட்டங்களை விளாசி அனைவரையும் மிரள வைத்தார். இதில் 9 சிக்ஸர்களும், 7 பௌண்டரிகளும் அடங்கும். 45 பந்துகளிலேயே சதத்தை எட்டி அபார சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்நிலையில் இலங்கையுடனான 3ஆவது T20i போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா,

‘சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு போட்டியிலும் தனது துடுப்பாட்டத்தின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, துடுப்பாட்டம் என்பது மிகவும் எளிது என மறைமுகமாக கூறுகிறார். இந்த போர்மில் இருக்கும் அவருக்கு நான் மட்டும் பந்துவீசி இருந்தால், என் மனதே உடைந்திருக்கும். அவருக்கு பந்துவீச வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இந்த நேரத்தில் ராகுல் திரிப்பாதியை குறிப்பிட்டு நான் பாராட்ட வேண்டும். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். அதேநேரம் அக்ஷர் படேல் போன்ற சகலதுறை வீரர் எனது அணியில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அணிக்கு தேவையான நேரத்தில் ஓட்டங்களையும் விக்கெட்டுக்களையும் எடுத்துக் கொடுக்கிறார்.

அணியின் தலைவராக இருக்கும் எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான். என் அணியில் இருக்கும் வீரர்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. போதியவரை அவர்களை அணிக்குள் வைத்திருந்து பாதுகாக்க வேண்டும். அனைவருமே உலகத்தரம் மிக்க T20 வீரர்கள். ஒரு சில போட்டிகள் தவறுகள் இடம்பெறுவது இயல்பு.

என்னைப் பொறுத்தவரை, இரண்டாவது T20 போட்டியில் எங்களுடைய 50 சதவீத ஆட்டத்தை கூட வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று நாங்கள் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். இது மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இதனிடையே, ஆட்டநாயகன் விருது வென்ற சூர்யகுமார் யாதவ் போட்டியின் பிறகு கருத்து தெரிவிக்கையில்,

‘இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் ஒரு T20 போட்டிக்குத் தயாராகும் போது உங்கள் மீதே நீங்கள் அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அதை அமுல்படுத்தினால் களத்தில் இருக்கும்போது அந்த விளையாட்டு உங்களுக்கு மிகவும் எளிதாக அமைந்துவிடும்.

இந்த வெற்றியினால் நான் கொண்டாடப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த வெற்றி எனக்கு எளிதில் வந்துவிடவில்லை. இந்த வெற்றிக்குப் பின்னால் எனது கடின உழைப்பு உள்ளது. இந்தப் போட்டியின்போது விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள தூரத்தைக் கணித்து நான் சில ஷொட்களை விளையாடினேன். என்னுடைய ஆட்டத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் ரசித்தார். நீங்கள் அனுபவித்து விளையாடுங்கள் என்று அவர் ஆலோசனை அளித்தார்’ என அவர் கூறினார்.

இதேவேளை, இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி செவ்வாய்க்கிழமை (10) அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<