இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியினை நிர்மூலமாக்கிய டில்ஷான்

233

வீதி  பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில், இலங்கை லெஜன்ட்ஸ் அணி திலகரட்ன டில்ஷானின் அபார ஆட்டத்தோடு இங்கிலாந்துக்கு லெஜன்ட்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் கடைசி குழுநிலை மோதலாக அமைந்த இந்தப் போட்டி, ராய்பூரில் இன்று (14) ஆரம்பமானது. 

நான்காவது வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை லெஜன்ட்ஸ்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியினர் திலகரட்ன டில்ஷானின் அபார பந்துவீச்சின் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். இது வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில் அணியொன்று இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகுறைவான ஓட்டங்களாகவும் பதிவானது. 

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக,  கிறிஸ் ட்ரெம்லட் 22 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்தார். 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், திலகரட்ன டில்ஷான் வெறும் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேஜர் T20 லீக்கில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய ஜீவன் மெண்டிஸ்

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 79 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணியினர் போட்டியின் வெற்றி இலக்கினை 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றியினை துடுப்பாட்டத்திலும் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி திலகரட்ன டில்ஷான் உறுதி செய்திருந்தார். 

அதன்படி. போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டில்ஷான் அரைச்சதம் பூர்த்தி செய்து வெறும் 26 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

அதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில் மொத்தமாக 5 வெற்றிகளைப் பதிவு செய்து தொடரின் புள்ளிகள் அட்டவணையிலும் இந்தியாவை பின்தள்ளி முதலிடம் பெற்றிருக்கின்றது. 

போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷானுக்கு வழங்கப்பட்டது. 

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் – 78/9 (20) க்ரிஸ் ட்ரெம்லட் 22, திலகரட்ன டில்ஷான் 64, ரங்கன ஹேரத் 172

இலங்கை லெஜன்ட்ஸ் – 814 (7.3) திலகரட்ன டில்ஷான் 61, மொன்டி பனேஸார் 264

முடிவு  – இலங்கை லெஜன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<