இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றுவதற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி சம்பியன் பட்டம் வென்ற நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதில் 48 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு தகுதி இல்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து பெங்களூர் புறநகர் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்தது. இந்த நிலையில், இம்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு கிடைக்காத காரணத்தால் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த 5 போட்டிகளும் மும்பைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
எனவே, புதிய அட்டவணையின் படி, செப்டம்பர் 30இல் பெங்களூரில் நடைபெறவிருந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான ஆரம்பப் போட்டி தற்போது குவஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் தடவையாக இலங்கையில்
- 2026 மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி லோர்ட்ஸில்
ஒக்டோபர் 23ஆம் திகதி நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும், ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறும் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியும் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல, ஒக்டோபர் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியும் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெறும் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த குவஹாட்டியிலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்டோபர் 26ஆம் திகதி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி குவஹாட்டியிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 29ஆம் திகதி முதலாவது முதலாவது அரையிறுதிப் போட்டி, பாகிஸ்தான் அணி தகுதி பெறுவதைப் பொறுத்து கொழும்பில் அல்லது குவஹாட்டியில் நடைபெறும். அதேபோல, ஒக்டோபர் 30ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி மற்றும் நவம்பர் 02ஆம் திகதி இறுதிப்போட்டி ஆகியவை நவி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<