இந்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம் மற்றும் 2022இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு போட்டித் தொடர்களையும் இலக்காகக் கொண்டு 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்களுக்கான வதிவிட பயிற்சி முகாமை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துடுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 60 பேருக்கு வருடாந்த ஒப்பந்தங்கள்
இதன்படி, நாடளாவிய ரீதியில் இருந்து 65 திறமையான வீரர்களைக் கொண்ட ஒரு அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கண்டியில் 21 நாட்கள் வதிவிட பயிற்சி முகாமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் டுபாயில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐ.சி.சியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, 2020இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு உலகக் கிண்ண தொடர்களை நடத்த இலங்கை தயார்
இதுஇவ்வாறிருக்க, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான வதிவிட பயிற்சி முகாமை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 26 கிரிக்கெட் வீரர்களை மாத்திரம் இந்த பயிற்சி முகாமில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் மாதங்களில் நடைபெறவுள்ள A கிரிக்கெட் அணிகளின் சுற்றுப் பயணங்களை இலக்காகக் கொண்டு இந்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு இந்த விசேட வதிவிட பயிற்சி முகாமை தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…




















