ரெட் புல் அனுசரணையில் ஏழாவது தடவையாக நடைபெற்று வருகின்ற உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் எந்தத் தோல்வியையும் சந்திக்காத இந்திய அணி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை நேரடியாகப் பெற்றிருந்தது. இந்நிலையில், கிண்ணத்திற்கான மோதலில் இந்தியாவை சந்திக்கும் அணியை தீர்மானிக்கும் ப்லே ஒஃப் போட்டி இன்று (28) நடைபெற்றது.
இறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணிக்காக சிறப்பாக விளையாடிய அர்ஸலான் பர்ஸான்ட் மற்றும் குர்ரம் ஷஃஸாட் ஆகியோர் முறையே 53 மற்றும் 34 ஓட்டங்களை பெற்றதோடு, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் ஷாமிக கருணாரட்ன மற்றும் ஜனித் லியனகே ஆகிய இருவரும் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பறியிருந்தனர்.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணியினர் அதனை ஈடு செய்துகொள்ளும் நோக்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடினர். எனினும், இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் பந்திலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மதுஷான் ரவிச்சந்திரகுமார் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
தொடர்ந்து ஹஷான் துமிந்து மற்றும் பசிந்து லக்ஷான்க ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு பலம் சேர்த்தது. இருவரும் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது ஹஷான் துமிந்து 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கேள்விக்குறியாகும் மெதிவ்ஸின் எதிர்காலம்?
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்…
தொடர்நது களமிறங்கிய ஜனித் லியனகே, பசிந்து லக்ஷான்கவுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இருவரும் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இறுதியாக இலங்கை அணியினர் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.
சிறப்பாக விளையாடிய பசிந்து லக்ஷான்க போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றிருதமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே நாளைய (29) SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்வையிடலாம்.
போட்டியின் ஸ்கோர் விபரம்
இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட