பானுக்க ராஜபக்ஷ, மதீஷ பத்திரனவிற்கு இலங்கை அணியில் வாய்ப்பு

364

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான இலங்கை அணியின் எதிர்பார்க்கைக் குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

>>IPL இல் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள்

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கை வரவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது.

அதன்படி இந்த மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவிருக்கும் இலங்கையின் எதிர்பார்கைக் குழாம்களே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை அணிக்காக கடைசியாக நடைபெற்ற T20I உலகக் கிண்ணத் தொடரில் ஆடியிருந்த அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ அவுஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் T20I மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை எதிர்பார்க்கைக் குழாம்களில் இணைக்கப்பட்டிருக்கின்றார். பானுக்க ராஜபக்ஷ தற்போது நடைபெற்று வருகின்ற IPL போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் முதுகு உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆடாது போயிருந்த முன்வரிசை துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க, அவரின் உபாதை குணமானதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூவகைப் போட்டிகளுக்குமான எதிர்பார்க்கை குழாம்களிலும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

2022ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகளில் அறிமுகமாகியிருந்த லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பத்திரனவிற்கும், 2022ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்திருந்த சகலதுறைவீரர் துனித் வெலால்கே ஆகிய வீரர்களுக்கும் இலங்கையின் எதிர்பார்க்கை குழாம்களில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இன்னும் அறிமுக வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ், டில்சான் மதுசங்க மற்றும் சுமின்த லக்ஷான் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் எதிர்பார்க்கை குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் எதிர்பார்க்கை அணிக்குழாம்களுக்கு தலைவராக தசுன் ஷானக்கவும், டெஸ்ட் குழாத்திற்கு திமுத் கருணாரட்னவும் தலைவராக பெயரிப்பட்டிருக்கின்றனர்.

>>IPL இல் கலக்கும் இலங்கை வீரர்களை பாராட்டும் சமிந்த வாஸ்

அத்துடன் வனிந்து ஹஸரங்க, துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கையின் ஒருநாள் மற்றும் T20I எதிர்பார்க்கை குழாம்களில் பெயரிடப்பட்டிருப்பதோடு, தினேஷ் சந்திமால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாம்களிலும், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் மூவகைப் போட்டிகளுக்குமான அணிக்குழாம்களிலும் பெயரிடப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கையின் இறுதி குழாம்கள் அடுத்த இரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெஸ்ட் எதிர்பார்க்கை குழாம் – திமுத் கருணாரட்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஒசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமில் மிசார, அஞ்சலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன, மொஹமட் சிராஸ், ஷிரான் பெர்னாண்டோ, டில்சான் மதுஷங்க, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷித மனாசிங்க, லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம, சுமின்த லக்ஷான், ஜெப்ரி வன்டர்செய்

ஒருநாள் எதிர்பார்க்கை குழாம் – தசுன் ஷானக்க (அணித்தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, பானுக ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, அஷேன் பண்டார, நிரோஷன் டிக்வெல்ல, துனித் வெலால்கே, தனன்ஞய லக்ஷான், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹஸரங்க, ஜெப்ரி வன்டர்செய், மகீஷ் தீக்ஷன, ரமேஸ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, லஹிரு மதுசங்க, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க

T20I எதிர்பார்க்கை குழாம் – தசுன் ஷானக்க (அணித்தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, அஷேன் பண்டார, நிரோஷன் டிக்வெல்ல, துனித் வெலால்கே, தனன்ஞய லக்ஷான், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹஸரங்க, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகன், சாமிக்க கருணாரத்ன, லஹிரு மதுசங்க, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, நுவான் துஷார, நிபுன் மாலிங்க

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<