ஓய்வு பெறப்போவதாக கூறியிருக்கும் பானுக ராஜபக்ஷ

1542
 

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான நிலைப்பாட்டில் இருப்பதாக ThePapare.com இற்கு அறியக்கிடைத்திருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்க

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பானுக்க ராஜபக்ஷ தான் ஓய்வு பெறும் நிலைப்பாட்டில் இருக்கும் விடயம் பற்றி, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் உருவாக்கியிருக்கியிருக்கும் உடற்தகுதி பரிசோதனைகளின் சிக்கல் தன்மையினை கருத்திற் கொண்டிருக்கும் பானுக்க ராஜபக்ஷ தனது வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யப்படாதபட்சத்தில் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பப்படுகின்றது.

அதன்படி தான் வழங்கியுள்ள கடிதத்தில் இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் உடற்தகுதி பரிசோதனையில் இருந்து கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்ற தொடர் கிரிக்கெட் தொடர்கள் கருதி தனக்கு விடுகை தருமாறு பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு பானுக்க ராஜபக்ஷ தனக்கான உடற்தகுதிப் பரிசோதனையினை ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களின் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இம்மாதம் 16ஆம் திகதி இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலேயில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையாக 2 கிலோ மீட்டர் துாரத்தினை 8 நிமிடம் 10 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஏனைய உடற்தகுதி பரிசோதனையான Skin Fold சோதனையில் 70 இற்கு குறைவான பெறுபேறுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 5 ஒருநாள் போட்டிகள் அடங்கலாக 18 T20I போட்டிகளில் ஆடிய பானுக்க ராஜபக்ஷ, நடைபெற்று முடிந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 143.51 என்கிற Strike Rate உடன் 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<