விளையாட்டுக்கள் மூலம் பொதுவாக மனித விழுமியங்களை வளர்க்கும் சந்தர்ப்பம் ஒன்று உருவாக்கப்படுகின்றது.

ஆனால், விளையாட்டுக்களில் மனித விழுமியங்களுக்கு மாற்றமாக விளையாட்டு வீரர்கள் பின்பற்றும் மத நம்பிக்கை, அவர்களின் நிறம், அவர்களது நாடு என்பவற்றினை வைத்து சிறுமைப்படுத்திய முகம் சுழிக்கக் கூடிய சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. 

3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்

கிரிக்கெட் விளையாட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கிரிக்கெட் விளையாட்டிலும் இவ்வாறு முகம் சுழிக்கக் கூடிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்கள் சிலவற்றையும், அவை ஏன் இடம்பெற்றன என்பது பற்றியும் பார்ப்போம். 

அம்லாவை அவமதித்த டீன் ஜோன்ஸ் 

டீன் ஜோன்ஸ்
Getty Images

கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க அணி இலங்கை வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. குறித்த டெஸ்ட் தொடரின் போட்டியொன்றில் குமார் சங்கக்காரவின் ஆட்டமிழப்பிற்காக தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா பிடியெடுப்பு ஒன்றை எடுத்திருந்தார்.

குறித்த பிடியெடுப்பு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்த அவுஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் ”தீவிரவாதி இன்னுமொரு விக்கெட்டினை எடுத்து விட்டான்“ எனக் கூறியது நேரடி அஞ்சலில் எதிர்பாராத முறையில் பதிவானது.  

ஹஷிம் அம்லா
Getty Images

அம்லா பின்பற்றும் இஸ்லாம் மதத்தையும், அம்லாவின் நீண்ட தாடியினையும் இலக்கு வைத்து இந்த வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது இந்த விடயம் கருதப்பட்டது.   

தொடர்ந்து தான் உபயோகம் செய்த வார்த்தைப் பிரயோகத்திற்கு டீன் ஜோன்ஸ் மன்னிப்பு கோரிய போதும், இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஒளிபரப்புச் செய்த டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவரை குறித்த தொடருக்கான வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கியது. 

பாகிஸ்தான் வீரர்களை மிருகங்கள் என அழைத்த தென்னாபிரிக்க நட்சத்திரம்

ஹேசல் கிப்ஸ்
Getty Images

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஹேஷல் கிப்ஸ், பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களை மிருகங்கள் என அழைத்ததோடு, பாகிஸ்தான் வீரர்கள் இருக்க வேண்டிய இடம் மிருககாட்சிசாலை என்றும் குறிப்பிட்டிருந்தார். கிப்ஸ் இவ்வாறு கூறிய விஷமக் கருத்து ஸ்டம்புகளில் பொருத்தப்பட்டிருந்த மைக்குகளில் பதிவானது. 

இந்த கருத்திற்கு கிப்ஸ் எச்சரிக்கையினைப் பெற்றதோடு, அப்போது தென்னாபிரிக்க அணி விளையாடவிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹர்பஜன் சிங்கின் சீண்டல்

ஹர்பஜன் சிங்
AFP

கடந்த 2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் தொடரின் போட்டியொன்று சிட்னி நகரில் இடம்பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான அன்ட்ரூ சைமன்ஸை ”குரங்கு” என அழைத்ததாக அவுஸ்திரேலிய அணி சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்டு ஹர்பஜன் சிங் கூறிய வார்த்தைகள், கறுப்பினத்தவரான சைமன்ஸினை நிறரீதியாக அவமதிப்புச் செய்ததாக கருதப்பட்டு ஹர்பஜன் சிங்கிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. 

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு நகரும் IPL தொடர்

அன்ட்ரூ சைமன்ஸ் 
AFP

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவுஸ்திரேலிய அணியின் முறைப்பாட்டை முற்றாக மறுத்ததோடு, அவுஸ்திரேலிய அணி பங்குகொள்ளும் டெஸ்ட் தொடரினையும் இரத்துச் செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

மொயின் அலி – ஒசாமா ஒப்பிடு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொயின் அலி தனது சுயசரிதையில், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது தான் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரினால் தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் இன் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாக கூறியிருந்தார். 

மொயின் அலி
Getty Images

பாகிஸ்தான் வம்சாவளியினைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றும் மொயின் அலி, தான் பின்பற்றும் மதத்திற்காக தீவிரவாதி ஒருவரின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டமைக்கு அப்போது மைதானத்திலேயே கோபம் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். 

எனினும், இந்த விடயம் தொடர்பில் விசாரிப்பதாக குறிப்பிட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) மொயின் அலியின் குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி  அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கொவிட்-19 இலிருந்து மீண்ட காஷிப் பட்டி பாகிஸ்தான் அணியுடன் இணைவு

பாகிஸ்தான் வீரரை நாட்டுக்குப் போகுமாறு கூறிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்

அஸார் ஸைதி
Getty Images

இங்கிலாந்து உள்ளூர் கழகமான சசெக்ஸ் அணிக்கு கவுண்டி போட்டிகளில் விளையாடிய அஸார் ஸைதியினை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிரைக் ஒவர்டன் ”உனது நாட்டுக்குப் போ” என கூறியதாக குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். 

இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு செம்டம்பரில் பதிவாகியதோடு, கிரைக் ஓவர்டனுக்கு ”இனம் அல்லது நாடு” தொடர்பிலான ஒரு தகாத வார்த்தைப் பிரயோகத்தினை உபயோகம் செய்ததற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 

கிரைக் ஒவர்டன்
Getty Images

இதேநேரம், அஸார் ஸைதி தன்னை சிறுமைப்படுத்திய விடயத்திற்காக கிரைக் ஓவர்டன் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

”வாலில்லா குரங்குகள்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஜிம்பாப்வே வீரர்

மார்க் வெர்மூலன்
AFP

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மார்க் வெர்மூலன் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது முகநூல் கணக்கில் கறுப்பின மக்களை ”வாலில்லா குரங்குகள்” எனப் பதிவிட்டிருந்தார். 

மார்க் வெர்மூலன் பதிவிட்ட கருத்திற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததோடு, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை அவரை கிரிக்கெட் நடவடிக்கைகளில் எதிலும் ஈடுபடாதவாறு தடை வழங்கியது. 

உருது மொழியில் நிறவெறி வாசகத்தை உபயோகித்த சர்பராஸ் அஹ்மட்

சர்பராஸ் அஹ்மட்
Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சர்பராஸ் அஹ்மட் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கறுப்பின வீரரான அன்டைல் பெஹ்லுக்வேயோவினை உருது மொழியில் ”காலே” அதாவது கறுப்பர் என அழைத்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. 

அன்டைல் பெஹ்லுக்வேயோ
Getty Images

இந்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட சர்பராஸ் அஹ்மட், தான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை என மன்னிப்புக் கோரியிருந்தார். எனினும், சர்பராஸ் அஹ்மட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அவரின் நிறவெறி கருத்திற்கு போட்டித் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பார்வையாளரின் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளான ஜொப்ரா ஆர்ச்சர்

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, நியூசிலாந்தைச் சேர்ந்த பார்வையாளர் ஒருவர் நிறவெறி வார்த்தைகள் கொண்டு இங்கிலாந்து அணியின் கறுப்பின வீரரான ஜொப்ரா ஆர்ச்சரை திட்டியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

ஜொப்ரா ஆர்ச்சர்
Getty Images

இந்த சம்பவத்தினை அடுத்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், குறித்த பார்வையாளருக்கு நியூசிலாந்து கிரிக்கெட் சபை நியூசிலாந்தில் இடம்பெறும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் பார்வையிட வாழ்நாள் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், குறித்த சம்பவத்திற்கு எதிராக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது எதிர்ப்பினைக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<