ப்ரிமா U15 சம்பியன்ஸ் கிண்ணத்தில் 800 கிரிக்கட் வீரர்கள்

5760
Prima Trophy Press Conference

15 வயதிற்குட்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான 10ஆவது ப்ரிமா U15 சம்பியன்ஸ் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று செப்டம்பர் 13ஆம் திகதி இலங்கை கிரிக்கட் சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ப்ரிமா குழு மற்றும் இலங்கை கிரிக்கட் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த தொடர் கடந்த காலங்களாக வடக்குகிழக்கு மாகாணங்களில் புலம் பெயர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கிரிக்கட் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கிராமப்புற வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட இலங்கை கிரிக்கட் சபையின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது.

இவ்வருடம் நடைபெறும் தொடரில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மொத்தமாக 800 கிரிக்கட் வீரர்கள் இந்த தொடரில் பங்கு கொள்ள இருக்கிறார்கள். இதில் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த வீரர்களும் அடங்குகிறார்கள்.

மாவட்ட அடிப்படையிலான போட்டிகளில் 39 அணிகள் பங்கு கொண்டன. இப்போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் 4ஆம் திகதி வரை நடைபெற்றன. அத்தோடு மாகாண அடிப்படையிலான போட்டிகளில் 12 அணிகள் பங்கு கொள்ள உள்ள நிலையில் இப்போட்டிகள் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. அரையிறுதிப் போட்டிகள் 26ஆம் திகதி நடைபெற உள்ளது.

இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி செப்டம்பர் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் 2 நாட்களைக் கொண்ட போட்டியாக கொழும்பு எஸ்.எஸ்.சி கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. அத்தோடு இந்த இறுதிப் போட்டி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி ஆட்டங்கள் டர்ப் (turf) ஆடுகளத்திலும் மற்றைய போட்டிகள் தரையை மூட உதவும் பாய் விரிப்பு தன்மையுடைய ஆடுகளங்களிலும் நடைபெறும்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்தற்போது வரையில் 80% தேசிய கிரிக்கட் வீரர்கள் வெளிபிரேதேசங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நான் நினைக்கிறேன் இந்த 15 வயதிற்குட்பட்டோர் தொடர் இளைய வீரர்களுக்கு சரியான ஆரம்பத் தொட்டிலாக அமையும்என்று கூறியுள்ளார்.

கடந்த காலப் போட்டிகளைப் பார்க்கும் போது தற்போதைய இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரும் இந்த ப்ரிமா கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளனர் என்பது முக்கிய விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்