மேற்கிந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் பூரான், பெபியன், தோமஸுக்கு வாய்ப்பு

289

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இளம் வீரர்களான நிக்கோலஸ் பூரான், பெபியன் அலென் மற்றும் ஒஸானே தோமஸ் ஆகியோருக்கு வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை வழங்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேற்கிந்திய கிரிக்கெட் சபையினால் இந்த ஆண்டுக்கு (2019–2020) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் நேற்று (09) வெளியிடப்பட்டது.

இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் …….

இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக வென்று அசத்தியது. ஆனால், அதன்பிறகு நடைபெற்ற லீக் போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததால் அரையிறுதி சுற்றுக்கு நுழையாமல் தொடரில் இருந்து வெளியேறியது

இந்த நிலையில், 2019 – 2020ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் அந்நாட்டு கிரிக்கெட் சபை பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரான், பெபியன் அலென் மற்றும் ஒஸானே தோமஸ் ஆகிய மூன்று வீரர்களும் இந்த புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிக்கோலஸ் பூரான், 9 லீக் ஆட்டங்களிலும் விளையாடி ஒரு சதத்துடன் 367 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், இலங்கையுடனான லீக் போட்டியில் 103 ஓட்டங்களை எடுத்தார்

அதேபோல, வேகப் பந்துவீச்சாளர் ஒஸானே தோமஸ் 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், சகலதுறை வீரரான பெபியன் அலென் 3 போட்டிகளில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்

இதுஇவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த டெரன் பிராவோவுக்கு மூன்று வகை (டெஸ்ட், ஒருநாள், டி-20) போட்டிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இப்புதிய ஒப்பந்தத்தில் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் அல்சாரி ஜோசப், கீமோ போல், கெமார் ரோச், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்

கடந்த முறை ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுனில் அம்ப்ரிஸ் தேவேந்திர பிஷு, மிக்கல் கம்மின்ஸ், ஷ்லி நெர்ஸ், கிரன் பவல், ரோமன் ரீபர் உள்ளிட்ட வீரர்களுக்கு இம்முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை

இதேநேரம், டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் ஷேன் டவ்ரிச், ஷெனன் கேப்ரியல், ஜோமெல் வொரிகன், கிரேக் பிராத்வெய்ட், ஜோன் கேம்ப்பெல், ரொஸ்டன் சேஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

அத்துடன், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் ஷெல்டன் காட்ரெல், நிக்கோலஸ் பூரான், ரோவ்மன் பவெல், ஒஸானே தோமஸ், பெபியன் அலென், கார்லஸ் பிராத்வெய்ட் உள்ளிட்டோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்

இதுதவிர, மேற்கிந்திய தீவுகள் பெண்கள் அணியைச் சேர்ந்த 15 வீராங்கனைகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

இந்த ஒப்பந்தம் நிகழாண்டு ஜூலை முதலாம் திகதி முதல் 2020 ஜூன் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். மொத்தமாக 19 வீரர்கள் ஒப்பந்தத்தின் மூலம் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இயக்குநர் ஜிம்மி அடம்ஸ் தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<