இமாம் உல் ஹக்கின் சதம் வீண்; ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா முன்னிலையில்

521
AFP

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் அணியை டக்வத் லூயிஸ் முறையில் 13 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்க 2-1 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

பெலுக்வாயோவின் சகலதுறை ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்க்கா

நேற்று (26) செஞ்சூரியன் நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய சர்ப்ராஸ் அஹ்மட்டின் பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்களினை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக் அவரது 5ஆவது ஒரு நாள் சதத்துடன் 116 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்தோடு, இமாம் உல் ஹக் இப்போட்டி மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 1,000 ஓட்டங்களை கடந்திருந்ததோடு, அதற்காக குறைவான இன்னிங்சுகளை (18) எடுத்துக்கொண்ட இரண்டாவது வீரராகவும் சாதனை படைத்திருந்தார்.

இமாம் உல் ஹக் ஒரு புறமிருக்க பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் பாகிஸ்தான் அணிக்காக அரைச்சதங்கள் விளாசியிருந்தனர். இதில் பாபர் அசாம் 72 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்களையும், மொஹமட் ஹபீஸ் 45 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக சிக்ஸர் அடங்கலாக 52 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். இதேநேரம் இவர்களுடன் இணைந்து அதிரடி காட்டிய இமாத் வஸீம் 23 பந்துகளில் 43 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

மறுமுனையில் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ககிஸோ றபாடா மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 318 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தினை காட்டியது. இதனை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தமது இன்னிங்ஸில் 16ஆவது ஓவரை எதிர்கொண்ட போது மழை காரணமாக போட்டி சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது.

எனினும், நிலைமைகள் சீரானதன் பின்னர் மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதன்போது தென்னாபிரிக்க அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் ஜோடி சத இணைப்பாட்டம் (108) ஒன்றினை பகிர்ந்தனர். இப்படியாக தென்னாபிரிக்க அணியினை இரண்டு வீரர்களும் வலுப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் போட்டியில் மீண்டும் மழையின் குறுக்கீடு உருவாக ஆட்டம் கைவிடப்பட்டது.

சர்ப்ராஷ் அஹமட்டை மன்னித்த தென்னாபிரிக்க அணி

ஆட்டம் கைவிடப்படும் போது தென்னாபிரிக்க அணி 33 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை குவித்துக் காணப்பட்டிருந்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியினர் டக்வத் லூயிஸ் முறைக்கு அமைவான போட்டி இலக்கினை (174) விட கூடுதலான ஓட்டங்களைப் பெற்றிருந்த காரணத்தினால் ஆட்டத்தின் வெற்றியாளர்களாக மாறினர்.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற ரீசா ஹென்ரிக்ஸ் அரைச்சதம் ஒன்றுடன் 90 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 83  ஓட்டங்களையும், அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி மாத்திரம் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் தெரிவானார்.

தொடரில் தென்னாபிரிக்கா  முன்னிலை பெற்றிருக்கும் இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி ஜொஹன்னஸ்பேர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 317/6 (50) – இமாம் உல் ஹக் 101(116), பாபர் அசாம் 69(72), மொஹமட் ஹபீஸ் 52(45), இமாத் வஸீம் 43*(23), டேல் ஸ்டெய்ன் 43/2(10), ககிஸோ றபாடா 57/2(10)

தென்னாபிரிக்கா – 187/2 (33) – ரீசா ஹென்ரிக்ஸ் 83*(90), பாப் டு பிளேசிஸ் 40*(42), ஹசன் அலி 33/1(6)

முடிவு – தென்னாபிரிக்க அணி 13 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறையில்)

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க