புதிய பயிற்சியாளர்களை இணைக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி

159

மேற்கிந்திய தீவுகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர் குழாத்தினுள் புதிய பயிற்சியாளர்கள் மூவரை உள்வாங்கியிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக இரண்டு T20 உலகக் கிண்ணங்களை தனது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வென்று கொடுத்த டெர்ரன் சமி கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

>> ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் குட்டி மாலிங்க மதீஷ

இந்த நிலையில் டேர்ரன் சம்மி ஆளுகையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் என்பவற்றில் அடுத்ததாக விளையாடவிருக்கின்றது. எனவே இந்த கிரிக்கெட் போட்டிகளின் போது மேற்கிந்திய தீவுகளை இன்னம் பலப்படுத்த அதன் பயிற்சியாளர் குழாத்தில் மூன்று பேர் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இணைக்கப்பட்டிருப்பவர்களில் இருவர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் என்பதோடு இதில் கார்ல் ஹூப்பர் 102 டெஸ்ட் மற்றும் 227 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கின்றார். அத்துடன் ஹூப்பர் பிக்பேஷ் லீக் தொடரில் அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினையும் CPL தொடரின் அணிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்த அனுபவத்தினையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளர் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஏனைய நபர்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ப்ளொய்ட் ரெய்பர் ஆறு டெஸ்ட், 8 ஒருநாள்

போட்டிகள் மற்றும் ஒரு T20I போட்டி என்பவற்றில் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். ரெய்பர் மேற்கிந்திய தீவுகளின் A அணி, 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் ஜமைக்கா தல்லாவாஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்றுவித்த அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

>> இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

இவர்கள் தவிர நியூசிலாந்தினைச் சேர்ந்த முன்னாள் சகலதுறைவீரர் ஜேம்ஸ் பிராங்லின் உம் மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளர்கள் குழாத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

ஜேம்ஸ் பிராங்லின் நியூசிலாந்து அணிக்காக 31 டெஸ்ட், 110 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 T20I போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதோடு, பிராங்லினும் பல்வேறு லீக் அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை அன்ட்ரி கோலேய் தலைமையிலான மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் குழாத்தினுள் உதவிப் பயிற்சியாளர்களாக கென்னி பென்ஜமின், ஸ்டுவார்ட் வில்லியம்சன் மற்றும் றயான் கிரிப்பித் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணி ஐக்கிய அரபு இராச்சியத்துடன் விளையாடும் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமாகவுள்ளதோடு, அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் பங்கெடுக்கும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் இம்மாதம் 18ஆம் திகதி ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<