பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலியா

122

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய ஆஸி அணி அதே உற்சாகத்துடன் பாகிஸ்தான் அணியுடன் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அதேவேளை இத்தொடருக்காக பாகிஸ்தான் அணி, அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் உட்பட பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து, சிரேஷ்ட வீரர் சுஹைப் மலிக் தலைமையில் புது முகங்களுடன் அவ்வணியின் குழாம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (22) இடம் பெற்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக ஷான் மசூத் மற்றும் மொஹமட் அப்பாஸ் ஆகியோர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரர்களாக களமிறங்கியிருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஹரிஸ் சொஹைல் இன் கன்னிச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கொன்றை நிர்ணயித்தது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹரிஸ் சொஹைல் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். அது தவிர உமர் அக்மல் 48, ஷான் மசூத் 40 ஓட்டங்கள் என பெற்றிருந்ததுடன் இறுதி நேரத்தில் இமாத் வசீம் அதிரடியாக 13 பந்துகளில் 28 ஓட்டங்களை விளாசியிருந்தார். பந்து வீச்சில் நதன் கௌடர் நைல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 63 ஓட்டங்களை பெற்றிருந்த போது தமது முதலாவது விக்கெட்டாக 24 ஓட்டங்களுடன் கவாஜா ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்ச் மற்றும் ஷோன் மார்ஷ் ஆகியோர் 172 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பின்ஞ்ச் 116 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இறுதியில் 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது ஆஸி அணி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஷோன் மார்ஷ் 91 ஓட்டங்களை பெற்றிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த 20 வயதுடைய இங்கிலாந்து வீரர்

  • ஆட்ட நாயகன் – ஆரோன் பின்ஞ்ச்

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 280/5 (50) – ஹரிஸ் சொஹைல் 101*, உமர் அக்மல் 48, ஷான் மசூத் 40, நதன் கௌடர் நைல் 61/2

அவுஸ்திரேலியா – 281/2 (49) – ஆரோன் பின்ஞ்ச் 116, ஷோன் மார்ஷ் 91*, மொஹமட் அப்பாஸ் 44/1

முடிவு – அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<