மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பெற்ற தொடர்ச்சியான மூன்று சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் அணியை பின்தள்ளி ஒரு இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அபூ தாபியில் நடைபெற்ற, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டதை தெரிவு செய்தது. அதன்படி சிறப்பாகத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணித் தலைவர் அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக தங்களுக்கிடையில் 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

38 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, பென்னின் பந்து வீச்சில் ஜோசேப்பிடம் பிடி கொடுத்து ஷர்ஜீல் கான் ஆட்டமிழக்க, இரண்டாம் விக்கெட்டுக்காக களம் இறங்கிய அசாமுடன் இணைந்து அசார் அலி இரண்டாம் விக்கெட்டுக்காக 147 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் அசாம் இத்தொடரில் தன்னுடைய மூன்றாவது சதத்தையும் பெற்றுக்கொண்டார். அதேபோன்று அசார் அலியும் தனது சதத்தைப் பெற்றுக் கொண்டார்

ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட இரு சதங்களின் உதவியுடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸை நிறைவு செய்தது. 39 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் இறுதி 11 ஓவர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடியான பந்து வீச்சின் காரணமாக பாகிஸ்தான் அணியினரால் மேலும் 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இறுதி பத்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 2 பௌண்டரிகள் மாத்திரமே பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 309 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு சிக்கித் திணறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லெவிஸ் மற்றும் க்ரெய்க் வைட் 54 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்று நல்ல ஆரம்பத்தை கொடுத்திருந்தாலும், அவர்களிருவரும் ஆட்டமிழந்ததன் பின்னர் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தடுமாறியதால், ஓவருக்கு தேவையான ஓட்ட விகித எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. 30 ஓவர்கள் முடிவில் 112 பந்துகளை ஓட்டமெதுவும் பெறாமல், அவ்வணி விணடித்திருந்தது. 5 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 136 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இறுதிப் போட்டியில் பெற்ற மூன்றாவது சதத்தின்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் பெற்ற மூன்றாவது பாகிஸ்தான் வீரராக பாபர் அசார் பதிவு செய்யப்பட்டதோடு, சர்வேதேச கிரிக்கெட்டில் எட்டாவது வீரராகவும் பதிவானார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி: 308/6 (50) – பாபர் அசார் 117, அசார் அலி 101, ஷர்ஜீல் கான் 38, சர்ப்ராஸ் அஹ்மத் 24*, AS ஜோசப் 62/2

மேற்கிந்திய தீவுகள் அணி: 172 (44) – க்ரெய்க் வைட் 32, டேனிஷ் ராம்டின் 37, ஏவின் லெவிஸ் 22, ஜேசன் ஹோல்டர் 26, முஹம்மத் நவாஸ் 40/3, வஹாப் ரியாஸ் 28/2   

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 13ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகவுள்ளது.