பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி லாகூர் குவாலெண்டர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
ஆறு அணிகள் பங்குகொண்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 6ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டி சவுத் சகீல் தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும், சஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான லாகூர் குவாலெண்டர்ஸ் அணியும் மோதின.
நேற்று லாகூர் கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடித்தாடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ 29, தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
லாகூர் குவாலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும், சல்மான் மிர்சா மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
202 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் குவாலெண்டர்ஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
- பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை ஒத்திவைத்தது PCB
- PSL T20 தொடரினை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றிய பாகிஸ்தான்
லாகூர் குவாலெண்டர்ஸ் அணியின் சார்பாக குசல் ஜனித் பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் 4 சிக்ஸர்களும், 5 பௌண்டறிகளும் அடங்கும். இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குசல் பெரேரா குவித்த தொடர்ச்சியான 2ஆவது அரைச் சதம் இதுவாகும்
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு வந்த சிகந்தர் ராசா, 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களும், 2 பௌண்டறிகளும் அடங்கும். இந்தப் போட்டியின் நாணய சுழற்சி போடுவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பு தான் ராசா பாகிஸ்தானுக்கு வந்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதற்கு முன்னரும் கூட இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் வந்து லாகூர் குவாலெண்டர்ஸ் அணி நொக்–அவுட் சுற்றுக்குத் தகுதி பெற உதவியதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர, மொஹமட் நஈம் 46 ஓட்டங்களையும், அப்துல்லாஹ் சபீக் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் லாகூர் குவாலெண்டர்ஸ் அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சம்பியன் பட்டம் வென்ற லாகூர் குவாலெண்டர்ஸ் அணிக்கு பாகிஸ்தான் பணப்பெறுமதியில் 140 மில்லியன் ரூபாவும், 2ஆவது இடத்தைப் பிடித்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 56 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.
போட்டியின் ஆட்ட நாயகனாக குசல் ஜனித் பெரேராவும், தொடரின் சிறப்பாட்டக்காரராகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் ஹசீம் நவாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். அதேபோல, தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை லாகூர் குவாலெண்டர்ஸ் அணியின் சஹீன் ஷா அப்ரிடியும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதை அதே அணியின் மொஹமட் நஈமும் தட்டிச் சென்றனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<