9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 49ஆவது போட்டி நேற்று விசாகப்பட்டினம் டாக்டர் ராஜசேகர ரெட்டி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி பூனே பந்து  வீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சின்  காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. டெல்லி அணி சார்பாக கருன் நயிர் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களையும், கடைசி நேரத்தில் களம் புகுந்த க்றிஸ் மொரிஸ் ஆட்டம் இழக்காமல் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 38  ஓட்டங்களையும் பெற்றனர். பூனே அணியின் பந்துவீச்சில் மிக சிறப்பாக பந்து வீசிய அஷோக் டிண்டா மற்றும் எடம் சம்பா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதன் பிறகு 120 பந்துகளில் 122 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் அஜின்கியா ரஹானே ஜோடி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே வேகமாக ஓட்டங்களை குவிக்க முயன்ற  உஸ்மான் கவாஜா 13 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 19 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின் ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் ஜோர்ஜ் பெய்லி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். ஆனால் போட்டியின் 9ஆவது ஓவரில் சிறிய மழை குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அப்போது பூனே அணி 8.2 ஒவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்ற நிலையில் இருந்தது. பிறகு சற்று  நேரம் களித்து போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் அதன் பின்பும் மீண்டும் 11 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் பூனே அணி 76 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை பெய்தது. இதனால் இப்போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்படவில்ல. அதன் பின் இப்போட்டியில் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறை படி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பூனே அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அஷோக் டிண்டா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்