அரையிறுதிக்குள் நுழைந்தது நியுசிலாந்து

817
அரையிறுதிக்குள் நுழைந்தது நியுசிலாந்து

 35 போட்டிகளைக் கொண்ட 6ஆவது ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் 23ஆவது போட்டி ஷஹீட் அப்ரிடி தலமையிலான பாகிஸ்தான் அணிக்கும் கேன் விலியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணிக்கும் இடையில் நேற்று மொஹாலியில் அமைந்துள்ள பிண்ட்ரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தீர்மானமிக்க இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகள் விபரம்

 பாகிஸ்தான் அணி:

 ஷஹிட் அப்ரிடி (தலைவர்), அஹமத் ஷேசாத், சர்ஜீல் கான், காலித் லதீப், உமர் அக்மல், சொஹைப் மலிக், சர்ப்ராஸ் அஹமத், இமாத் வசீம், மொஹமத் ஆமீர், மொஹமத் சமி, மொஹமத் இர்பான்

 நியுசிலாந்து அணி:

கேன் விலியம்சன் (தலைவர்), மார்டின் கப்டில், கொலின் முன்ரோ, கொரி என்டர்சன், ரொஸ் டெய்லர், க்ராண்ட் எலியட், லூக் ரொஞ்சி, மிச்சல் சாண்ட்னர், எடம் மிலேன், மிச்சல் மெக்லனகஹன், இஷ் சோதி

இதன் படி நியுசிலாந்து அணி சார்பாக மார்டின் கப்டில் மற்றும் தலைவர் கேன் விலியம்சன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்டின் கப்டில் ஆரம்பம் முதல் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க மறுமுனையில் தலைவர் கேன் விலியம்சன் நிதானமாகவும் மெதுவாகவும் விளையாடி நியுசிலாந்து அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். கப்டிலின் அதிரடி ஆட்டத்தால் நியுசிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 58 ஓட்டங்களைக் குவித்திருந்தது . அதன் பின் முதல் விக்கட்டுக்காக 62 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கேன் வில்லியம்ஸன் 17 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கொலின் முன்ரோ 7 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். 3ஆவது விக்கட்டில் ஜோடி சேர்ந்த மார்டின் கப்டில் மற்றும் கொரி என்டர்சன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆரம்பம் முதல் அற்புதமாக சளைக்காமல் ஓட்டங்களைக் குவித்த மார்டின் கப்டில் 48 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 பிரமாண்டமான சிக்ஸர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்று முஹமத் சமியின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு களத்தை விட்டு வெளியேறினார். இவரது விக்கட்டைத் தொடர்ந்து நியுசிலாந்து அணியின் ஓட்டங்களைப் பெறும் வேகம் குறைவடைந்தது. அனுபவ வீரரான ரோஸ் டெய்லர் இறுதியில் வந்து சிறப்பாக விளையாட அவரின் உதவியோடு 20 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து அணி 5 விக்கட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் முஹமத் சமி மற்றும் ஷஹிட் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

181 ஓட்டங்களை எடுத்தால் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பைப் பெற முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அஹமத் ஷேசாத் மற்றும் சர்ஜீல் கான் ஜோடி களம் இறங்கியது. நியுசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டிலை ஒத்தவாறே பாகிஸ்தான் அணியின் சர்சில் கானும் ஆரம்பம் முதல் மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்தார். ஆரம்ப விக்கட்டுக்காக அஹமத் ஷேசாத் மற்றும் சர்ஜீல் கான் ஜோடி 33 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்ததனர். 25 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக மிக அபாரமாகத் துடுப்பாடிய சர்ஜீல் கான் 47 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று மிக வலுவான நிலையில் காணப்பட்டது பாகிஸ்தான் அணி. சர்ஜீல் கானின் விக்கட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள் பெறும் வேகம் குறைந்தது. இடைக்கிடையே விக்கட்டுகள் செல்ல போட்டியின் ஆதிக்கம் நியுசிலாந்து அணியின் பக்கம் பம்பரம் போல் திரும்பியது. மிகச் சிறப்பக பந்து வீசிய சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களைக் கட்டுபடுத்த பாகிஸ்தான் அணி வீரர்களால் பவுண்டரிகளைப் பெற முடியவில்லை. முதல் 6 ஓவர்களில் 66 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி வீரர்களால் கடைசி 14 ஓவர்களில் வெறுமனே 92 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி வீரர்களால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் சர்ஜீல் கானைத் தவிர அஹமத் ஷேசாத் 30 ஓட்டங்களையும் உமர் அக்மல் 24 ஓட்டங்களையும் தலைவர் ஷஹிட் அப்ரிடி 9 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற சொஹைப் மலிக் 15 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் சர்ப்ராஸ் அஹமத் 11 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றார்கள். நியுசிலாந்து அணியின் பந்து வீச்சில் மிச்சல் சாண்ட்னர் மற்றும் எடம் மிலேன் ஆகியோர் 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்ற இஷ் சோதி முக்கிய விக்கட்டான ஷஹிட் அப்ரிடியின் விக்கட்டை தன் வசமாக்கினார்.

குழு இரண்டின் அணிகளின் தரவரிசையில் ஏற்கனவே நியுசிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவான நிலையில் மற்ற 3 அணிகளுக்கும் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. பங்களாதேஷ் அணிக்கும் வாய்ப்புகள் காணப்பட்டாலும் அது மிகக் அரிதே!!

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியுசிலாந்து அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் தெரிவு செய்யப்பட்டார். 6ஆவது ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் மாலை 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆப்கனிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றுமொரு போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.