குக் சாதனை, இங்கிலாந்து அணி பலமான நிலையில்

238
Pak vs ENg Day 3
© Getty Images

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சுஹைல் கானின் அபாரப் பந்து வீச்சால் 297 ஓட்டங்களுக்கு சுருண்டது. சுஹைல் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பேலன்ஸ் 70 ஓட்டங்களையும், மொயீன் அலி 63 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. அசார் அலியின் சதம் (139) மற்றும் சமி அஸ்லாமின் (82) அரைச்சதம் ஆகியவற்றால் 2ஆவது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை எடுத்திருந்தது.

யூனிஸ்கான் 21 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. யூனிஸ்கான் உடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். யூனிஸ்கான் மேலும் 10 ஓட்டங்களை எடுத்து 31 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வோக்ஸ் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அசாத் ஷபிக் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ப்ரோட் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் மிஸ்பா 56 ஓட்டங்களை சேர்க்க அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் சர்பிராஸ் அஹமத்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றைப்படை ஓட்டங்களோடு பெவிலியன் திரும்ப பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.  சர்பிராஸ் அஹமத் 46 ஓட்டங்களை  எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்இங்கிலாந்து அணி சார்பில் பிராட், வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், எண்டர்சன் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இன்றைய நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து  அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. இதன் படி தமது 2ஆவது இனிங்ஸில் ஆடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 120 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் எலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் மறுமுனையில் எலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர். தற்போது வரை இங்கிலாந்து அணி 10 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 17 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

எலஸ்டயர் குக்கின் சாதனை

இங்கிலாந்து பாகி்ஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து அணியின்  2ஆவது இனிங்ஸில் எலஸ்டயர் குக் 24 ஓட்டங்களை எடுத்திருக்கும் போது 13780 ஓட்டங்களை எடுத்து அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

குக் 2006 முதல் தற்போது வரை 228 போட்டிகளில் 333 இனிங்ஸில் விளையாடி இந்த ஓட்டங்களை  எடுத்துள்ளார். இதில் 34 சதம் அடங்கும். இதற்கு முன் கெவின் பீட்டர்சன் 2004 முதல் 2014 வரை 275 போட்டிகளில் 340 இனிங்ஸில் விளையாடி 13779 ஓட்டங்களைக் குவித்தது தான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது குக் இதை முறியடித்துள்ளார்.

இயன் பெல் 13331 ஓட்டங்களோடு 3ஆவது இடத்திலும், கிரகாம் கூச் 13190 ஓட்டங்களோடு 4ஆவது இடத்திலும், அலெக்ஸ் ஸ்டூவர்ட் 13140 ஓட்டங்களோடு 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 297/10 – கெரி பேலன்ஸ் 70, மொயின் அலி 63, எலாஸ்டயர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ 39, சுஹைல் கான்  96/5, ரஹத் அலி 83/2, முஹமத் அமீர் 53/2

பாகிஸ்தான் – 400/10 – அசார் அலி 139, சமி அஸ்லம் 82, மிஸ்பா உல் ஹக் 56, சர்பிராஸ் அஹமத் 46*, ஸ்டூவர்ட் ப்ரோட் 83/3, க்றிஸ் வோக்ஸ் 79/3, ஜேம்ஸ் எண்டர்சன் 54/2

இங்கிலாந்து  – 120/0 – எலாஸ்டயர் குக்  64*, எலெக்ஸ் ஹேல்ஸ் 50*

இங்கிலாந்து அணி 17 ஓட்டங்கள் முன்னிலையில்