தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின்படி T20I தொடரில் விளையாடிவந்த மிச்சல் ஓவ்ன் ஒருநாள் தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
>>நுவனிதுவின் அதிரடியில் க்ரேய்ஸ் அணிக்கு வெற்றி<<
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குழாத்தின்படி மிச்சல் ஓவ்ன் ஒருநாள் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியின் போது காகிஸோ ரபாடா வீசிய பந்து மிச்சலின் ஹெல்மட்டை தாக்கியிருந்தது.
இதன் காரணமாக மிச்சல் ஓவ்ன் 12 நாட்களுக்கு கண்கானிப்பில் இருக்கவேண்டும் என வைத்தியர்கள் அறிவித்துள்ள நிலையில், இவர் ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் லான்ஸ் மொரிஸ் மற்றும் மெதிவ் ஷோர்ட் ஆகியோரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதைகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஆரோன் ஹார்டி, கூப்பர் கொன்லி மற்றும் மெட் குனமன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக மிச்சல் மார்ஷ் தலைமையில் அவுஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளதுடன், டிராவிஷ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், கெமரூன் கிரீன், மார்னஸ் லபுசேங், ஜோஸ் ஹேஷல்வூட் மற்றும் அடம் ஷாம்பா போன்ற முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா குழாம்
மிச்சல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பார்லெட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷிஸ், நேதன் எல்லிஸ், கெமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேஷல்வூட், ட்ராவிஷ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், மெட் குனமன், மார்னஸ் லபுசேங், அடம் ஷாம்பா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<