மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி, அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில், தன்னுடைய மீள்வருகையை உறுதிசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
டெரன் சமிக்கு தற்போது 36 வயதாகின்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள தனக்கான கதவு அடைக்கப்படவில்லை என டெரன் சமி குறிப்பிட்டுள்ளார்.
>>பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக ரெட்போர்ட் நியமனம்<<
“நான் இந்தமுறை நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக்கில் சிறப்பாக பிரகாசிக்க வேண்டும் என்பதுடன், சென்.லூசியா அணியையும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த வருடத்தில் இதனை சரியாக செய்துமுடிக்க முடியுமாயின், அனைவரது பார்வையும் என்னுடைய பக்கம் திரும்பும்.
நான் இதுவரையில் ஓய்வுபெறவில்லை. நான் ஓய்வுபெறுவதற்கான கதவை மூடவில்லை. இம்முறை சென்.லூசியா அணியை சிறப்பாக வழிநடத்துவதுடன், எனது தனிப்பட்ட திறமையை சிறப்பாக வெளிக்காட்ட முடிந்தால், தேர்வுக்குழுவினர் என்மீதான கவனத்தை செலுத்துவர்” என தன்னுடைய மீள்வருகை தொடர்பில் சமி குறிப்பிட்டார்.
டெரன் சமி இறுதியாக 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது T20 உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது. எனினும், பின்னர், உபாதை மற்றும் சில குழறுபடிகள் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்காக அவர் விளையாடவில்லை. எனினும், அதேபோன்ற ஒரு நாளில் மீண்டும் அணிக்காக விளையாட சமி எதிர்பார்த்துள்ளார்.
T20 உலகக் கிண்ணம் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் மேற்கிந்திய தீவுகளின் சில முன்னணி T20 வீரர்கள் அணிக்கு வரத்தொடங்கியுள்ளனர். முக்கியமாக கீரன் பொல்லார்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்றிருந்த டுவைன் பிரவோ மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார்.
>>Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32<<
இந்தநிலையில், முன்னாள் அணித்தலைவரான டெரன் சமி மீண்டும் அணிக்குள் நுழைவது தொடர்பில் கீரன் பொல்லாரட் பொதுவாக கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
“மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் புதிய தலைமைதுவத்தை பொருத்தவரை, அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவதற்கான நெறிமுறை கையாளப்படுகிறது. CPL தொடரில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி, தெரிவுக்குழுவின் தெரிவுக்கு உள்வரமுடியும். தனிப்பட்ட ரீதியில் தெரிவுகள் இடம்பெறாது. ஆனால், பிரகாசிப்பு மற்றும் உடற்தகுதி என்பன அடுத்த தொடருக்கான வீரர்களை தெரிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது டுவைன் பிராவோ மற்றும் அன்ரே ரசல் ஆகிய இரண்டு சகலதுறை வீரர்கள் முன்னணி வீரர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக ரோவ்மன் பொவல் மற்றும் கீமோ போல் ஆகியோர் உள்ளனர். எனவே, சமி அடுத்த உலகக் கிண்ணத்துக்கு தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின், மிகச்சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டயாத்தில் உள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<