வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது?

651

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. 

கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது.   

தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின்  கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்கட்டமாக தேசிய அணியை முன்னேற்றும் திட்டத்தில் கவனம் செலுத்தி இருந்தது.

குறித்த திட்டத்திற்கு அமைவாக, இலங்கை கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச மட்டத்தில் அதிக அனுபவத்தை கொண்டவருமான நிசாம் பக்கீர் அலி தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக  கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.  

பக்கீர் அலியின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி பங்கு கொள்ளவுள்ள முதலாவது தொடராக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF Championship) கால்பந்து போட்டிகள் அமைகின்றது. இதற்கான அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி முதல் பல கட்டங்களாக நடைபெற்றன.

அந்த வகையில் இந்த வீரர்கள் தேர்வு  முகாமின் முதல் மூன்று கட்டங்களும் கொழும்பில் இடம்பெற்றிருந்தன. இதில், டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் (DCL)  விளையாடும் கழக அணிகளின் வீரர்களும்,  டிவிஷன் – I கால்பந்து கழகங்களின் வீரர்களும் பங்கெடுத்திருந்தனர்.   

இதனையடுத்து வடக்கு, கிழக்கு வீரர்களினை தேசிய அணிக்கு உள்வாங்கும் வீரர்கள் தேர்வு முகாம் மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறாக இடம்பெற்றன.  

Photos: National Football Trials 2018 – Northern Province

Photos of the National football trials in Northern Province 2018

இதில் வட மாகாண வீரர்களுக்கான தேர்வு முகாம் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை யாழ். அரியாலை கால்பந்து பயிற்சி மையத்திலும், கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வு முகாம் 21ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் இடம்பெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 80 வருடகால வரலாற்றினைக் கொண்ட இலங்கை கால்பந்து விளையாட்டில் புதிய திறமைகளை இனம் காணும் நோக்கோடு (வடக்கு,கிழக்கு)  வீரர்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கே சென்று தேர்வு முகாம்களை நடாத்தியது இதுவே முதல் தடவையாகும்.

குறித்த பகுதி வீரர்களுக்கு சிரமம் இன்றி தேசிய அணிக்கு தெரிவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த தேர்வு முறையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 36 வீரர்கள் பங்குகொண்டனர். எனினும், வடக்கு வீரர்களின் பங்கெடுப்பு மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாகவே 15 விடக் குறைந்த வீரர்களே இத்தேர்வில் பங்கு கொண்டிருந்தனர்.

கால்பந்து மீது அதிகம் பிரியம் கொண்ட பிரதேசம் என்று கூறப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 200க்கும் அதிகமான விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்ற நிலையில், தேர்வில் இவ்வளவு குறைவான வீரர்கள் பங்கு கொண்டமை, உண்மையில் அவர்கள் கால்பந்து மீது எவ்வளவு பிரியம் கொண்டுள்ளனரா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்களுக்குமான இந்த தேர்வு முகாம்கள் முடிவடைந்ததன் பின்னர் இதில் பங்கேற்றிருந்த தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி மற்றும் இலங்கை கால்பந்து அணியின் புதிய முகாமையாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சுனீல் சேனவீர ஆகியோர் தங்களது கருத்துக்களை ThePapare.com உடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, தேசிய அணியின் முகாமையாளரான சுனில் சேனவீர முன்னேற்றகரமான கால்பந்து வீரர்களை கொண்டிருக்கும்  மேல் மாகாணத்தினை விட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வீரர்கள் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு வீரர்களை எடுத்துப் பார்த்தால்,  அவர்கள் நுட்பம் சார்ந்த விடயங்களில் (Technical)  சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு சிறந்த பயிற்றுவிப்பாளர்களும் இருக்கின்றனர். ஆனால், இங்கிருக்கும் வீரர்களிடம் இந்த விடயங்கள் குறைவாக இருக்கின்ற போதிலும், கால்பந்து விளையாட்டு மீது இவர்கள் (வடக்கு, கிழக்கு வீரர்கள்) வைத்திருக்கும் காதல் வியக்கத்தக்கது. அது கொழும்பு வீரர்களிடம் சில நேரங்களில் இருப்பதில்லை. இங்குள்ள இளம் வீரர்கள் மிகவும் ஊக்கத்துடன் விளையாடுகின்றனர். “  என்றார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் சேனவீர வடக்கு, கிழக்கு வீரர்கள் பின்தங்கியிருக்கும் குறித்த நுட்பம் சார்ந்த விடயங்களினை முன்னேற்ற கால்பந்து சம்மேளனம்  நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

வெளி மாவட்டங்களில் உள்ள வீரர்களுக்கு நுட்பம் சார்ந்த விடயங்களை முன்னேற்றாமல் அவர்களால் சிறந்த வீரர்களாக உருவாக முடியாது.  அடுத்த மாதமளவில் இங்குள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கும், கால்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கும் C அல்லது D தரச் சான்றிதலுக்கான பாடநெறி ஒன்றினை ஒழுங்கு செய்து முதலில் அவர்களை பயிற்றுவிக்க எதிர்பார்த்துள்ளோம். இப்படியான வேலை ஒன்றை செய்து நல்ல பயிற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இப்பகுதி கால்பந்து வீரர்களின் தரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம். “ என்றார்.

Photos: National Football Trials 2018 – Eastern Province

Photos of National Football Trials 2018 – Eastern Province Title Photos

மேல் மாகாணம், மத்திய மாகாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள கால்பந்து வீரர்கள் பாடசாலை மட்டத்தில் (இளம் பருவத்தில்) இருந்தே பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்கு குறித்த வீரர்களின் பெற்றோர்களும் நல்ல முறையில் ஆதரவு தருகின்றனர். ஆனால், வடக்கு, கிழக்கில் பெரும்பாலான இடங்களில் இப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறுவதில்லை.

அதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல கால்பந்து அணிகள் ஏதாவது கால்பந்து போட்டித் தொடர் ஒன்றில் விளையாட தெரிவாகியிருந்தால் மட்டுமே பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் தொடர் பயிற்சிகளைக் காண்பதென்பது மிகவும் குறைவு. தொடர்ச்சியாக கால்பந்து வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டால் மாத்திரமே அவர்களால் சிறந்த பெறுபேறுகளை காட்ட முடியும். ஆனால், இங்கிருப்பவர்கள் இந்த விடயங்களில் தளர்வினைக் காட்டுகின்றனர்.

எனினும், கிழக்கு மாகாணத்தோடு ஒப்பிடும் போது கால்பந்து விளையாட்டில் வட மாகாணம் சற்று முன்னேற்றகரமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம். வட மாகாண வீரர்கள் சிலர் கடும் முயற்சிகளின் பின்னர் பிரபல்யமான தொழில்சார் (Professional) கால்பந்து கழகங்களுக்கு விளையாடி வருவது இதற்கு சான்றாகும். ஆனால், இப்படியான தொழில்சார் கால்பந்தில் ஈடுபடும் கிழக்கு வீரர்கள் ஓரிருவரை கூட அவதானிப்பது சிரமம்.

இந்தப் பிரச்சினைகளே  வடக்கு, கிழக்கு மாகாண கால்பந்து வீரர்கள் நுட்பம் சார்ந்த விடயங்களில் பின்தங்க முக்கிய காரணமாக அமைகின்றன.

இதனையடுத்து, தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பக்கீர் அலி முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இப்படி ஒரு தேர்வு முகாம் ஏற்பாடு செய்தமைக்கான காரணத்தையும், தேர்வு முகாமில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும் கதைத்தார்.

வடக்கு, கிழக்கு கால்பந்து வீரர்களை நாங்கள் (தெரிவுக்காக) கொழும்புக்கு அழைத்தால் அவர்களுக்கு (சிங்களம்) மொழியினைப் பேசுவதில் சற்று சிரமம் இருக்கும்.  அதோடு, கொழும்பின் காலநிலை வித்தியாசமானது. அதுவும் இவர்களுக்கு ஒரு பிரச்சினை. எனவே, கால்பந்து சம்மேளனமும் நாமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்றே தேர்வு முகாம்களை நடாத்த முடிவு எடுத்தோம். ஆனால், எமக்கு கவலையான விடயம் என்னவெனில் இங்கிருக்கும் வீரர்களிடம் விளையாட்டுக்கான ஆர்வம் இருக்கின்ற போதிலும் சரியான தரத்துடன் இங்குள்ள கால்பந்து விளையாட்டு இல்லை.

நான் (தேசிய அணிக்காக) விளையாடிய காலங்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் மிகவும் சிறந்த கால்பந்து வீரர்கள் இருந்தனர். அதே, தரத்திலான வீரர்கள் இன்னும் இருப்பர் என எதிர்பார்த்தேன். இதனை சரி செய்ய நாங்கள் கால்பந்து சம்மேளத்தினாலும், எங்களது நுட்பம் சார்ந்த துறையினாலும் (Technical Department) ஏதாவது செய்ய வேண்டும். “

பக்கீர் அலியும் இலங்கை கால்பந்து அணியின் முகாமையாளர் போன்று  வடக்கு, கிழக்கின் இளம் கால்பந்து வீரர்கள் சிறந்த பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

இங்கிருக்கும் கால்பந்து பயிற்சியாளர்களை ஒரு குழுவாக ஒன்றினைத்து நிகழ்கால கால்பந்து உலகின் விடயங்களை அவர்களுக்கு முதலில் கற்பிக்க வேண்டும்.  அப்படி செய்யும் போது அவர்கள் இங்கிருக்கும் வீரர்களை நல்ல முறையில் வழிநடாத்துவர்  

இன்னும், பக்கீர் அலி இந்த தேர்வு முகாம்களில் இருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படும் வீரர்கள் கால்பந்து பயிற்சி வசதிகள் அனைத்தும் கொண்ட கொழும்பில் தங்கியிருந்த வண்ணமே மேலதிக பயிற்சிகள் வழங்க அழைக்கப்படுவர் எனக் கூறினார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் முக்கிய கால்பந்து போட்டிகளை பார்க்கவரும் தேர்வாளர்கள் சிறந்த வீரர்களை இனம்காணும் போது அவர்களை தேசிய அணிக்கு உள்வாங்குவார்கள் எனவும் கூறினார்.

இவை தவிர, தற்போது சர்வதேச கால்பந்து போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இலங்கை கால்பந்து அணியினை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர, அனைவரினதும் உழைப்பு அவசியம் எனவும் பக்கீர் அலி சுட்டிக் காட்டியிருந்தார்.

நாங்கள், FIFA தரவரிசையில் இப்போது 200ஆவது இடத்தில் இருக்கின்றோம். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம். எனவே, இந்த நிலையிலிருந்து எமது அணியை முன்னேற்ற நாம் முயற்சிக்க வேண்டும். இது எங்களால் மட்டும் முடிந்த ஒரு விடயம் அல்ல. இதற்கு வீரர்களோடு பெற்றோர், பயிற்றுவிப்பாளர்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த முயற்சி அவசியம். இதன் மூலமே நாம் சாதிக்க முடியும். “ என்றார்.

எவ்வாறிருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்கள் கால்பந்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். எனினும், நடந்து முடிந்த தேசிய அணிக்கான தேர்வுகளாது, உயர் மட்டத்தில் பிரகாசிப்பதற்கு தாம் இன்னும் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறித்த பகுதி வீரர்களுக்கு உணர்த்தியிருக்கும்.

தமது பகுதியின் கால்பந்தை முன்னேற்றமடையச் செய்வதற்கு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து வீரர்களும், பெற்றோரும், உரிய அதிகாரிகளும், லீக் உறுப்பினர்களும் முன்னின்று முயற்சித்தால் மட்டுமே குறித்த பகுதி வீரர்களுக்கு நாளை தேசிய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்தை முன்னேற்றமடையச் செய்ய உங்களது ஆலோசனை என்ன? அதனை கீழே பதிவிடுங்கள்.