பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு வெண்கலம்

60th India Inter State Athletics Championship - 2021

157

இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்ற 60ஆவது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாஆராச்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த நிமாலி, முதல் 600 மீற்றரில் நான்காவது இடத்தில் ஓடிக்கொண்டிந்தார். எனினும், கடைசி 100 மீற்றரில் வேகத்தை அதிகரித்த நிமாலி, இந்திய வீராங்கனை சாலு சானுவைப் பின்தள்ளி போட்டியை 2 நிமிடங்கள் 05.69 செக்கன்களிலி நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவில் வெண்கலப் பதக்கம் வென்றார் லக்ஷிகா சுகன்தி

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மிலன் பைன்ஸ் போட்டியை 2 நிமிடங்கள் 02.57 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அத்துடன், டெல்லி வீராங்கனையான சாந்தா (2 நிமிடங்கள் 03.36 செக்.) வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றை 46.88 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை வீரர் காலிங்க குமாரகே முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, பெண்களுக்கான 400 மீற்றரில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க இரண்டாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்

குறித்த போட்டியை 54.65 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 2018 ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய 4X400 அஞ்சலோட்ட அணியில் இடம்பிடித்த இந்திய வீராங்கனை வி.கே விஷ்மயாவை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 100 மீட்டரில் அமாஷாவுக்கு வெள்ளிப் பதக்கம்

இதன்படி, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இவ்விரண்டு வீரர்களும் தகுதிபெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் சுற்றை 21.16 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை வீரர் காலிங்க குமாரகே முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனவே, கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் தொடரில் இலங்கை அணி இதுவரை 2 பதக்கதங்களை வென்றுள்ளது

இதில் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் லக்ஷிகா சுகன்தி வெண்கலகப் பதக்கத்தையும், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<