நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்ச்சேர்ச்சில் இன்று (26) ஆரம்பித்துள்ள பொக்ஸிங் டே என வர்ணிக்கப்படும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அபாரமான வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி, நியூசிலாந்து அணியை 178 ஓட்டங்களுக்கு சுருட்டியுள்ளது. அத்துடன் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களை பெற்றுள்ளது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கோடு நியூசிலாந்துடன் மோதும் இலங்கை
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் …
இரண்டு அணிகளுக்கும் இடையில் வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சின் மூலமாக இலங்கை அணி சவால் கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் மற்றும் கடந்த போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய டொம் லத்தாம் ஆகியோரின் விக்கெட்டுகளை சுரங்க லக்மால் வீழ்த்த, நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் விழ்த்தி சுரங்க லக்மால் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த, நியூசிலாந்து அணி, மதியபோசன இடைவேளையின் போது, 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
Video – Boxing Day belonged to Suranga Lakmal – 2nd Test: Day 1 | Cricketry
மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிங்கிய நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, லஹிரு குமாரவின் சிறந்த களத்தடுப்பின் மூலமாக ரோஸ் டெய்லர் ரன்–அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். இவரை அடுத்து களமிறங்கிய கொலின் டி கிராண்டோம் ஒரு ஓட்டத்துடன் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து அணி 64 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மெதிவ்ஸ் மற்றும் மெண்டிஸின் அனுபவ ஆட்டமும், மாலிங்கவின் தலைவர் பதவியும் – Cricket Kalam 04
நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை ….
எனினும், இதனையடுத்து துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய டீம் சௌதி, பி.ஜே. வெட்லிங்குடன் இணைந்து வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். இவர்களின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியிருந்தது. டீம் சௌதி 65 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, இவர்கள் இருவரும் 7வது விக்கெட்டுக்காக 108 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் டீம் சௌதியை தொடர்ந்து வெட்லிங் 46 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது, 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மேலதிக இரண்டு விக்கெட்டுகளும் லஹிரு குமாரவின் ஒரே ஓவரில் வீழ்த்தப்பட அந்த அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் நியூசிலாந்து அணியை மிரட்டிய, சுரங்க லக்மால் தனது இரண்டாவது டெஸ்ட் ஐந்து விக்கெட் குவிப்பினை கைப்பற்றினார். இவருடன் சிறந்த பங்களிப்பினை வழங்கிய லஹிரு குமார 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவ்வாறு, பந்து வீச்சில் பிரகாசித்த இலங்கை அணியின், துடுப்பாட்டத்தை தனுஷ்க குணதிலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆரம்பித்தனர். வேகப்பந்துக்கான சாதகத்தை மாலை வேளையிலும் கொண்டிருந்த கிரிஸ்ட்ச்சேர்ச் ஆடுகளத்தை, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் பயன்படுத்த தவறவில்லை. குறிப்பாக டீம் சௌதி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.
இலங்கை அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவை 8 ஓட்டங்களுடன் வெளியேற்றிய டீம் சௌதி, தனது அடுத்தடுத்த ஓவர்களில் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் (6) மற்றும் தனுஷ்க குணதிலக்க (8) ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களத்தில் இணைந்தனர்.
மெதிவ்ஸுக்கு துடுப்பாட்ட ஆலோசனை வழங்கிய குமார் சங்கக்கார
நியூசிலாந்து அணியுடனான முதலாவது ….
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இக்கட்டிலிருந்து மீட்டெடுத்த குசல் மெண்டிஸ், துரதிஷ்டவசமாக கொலின் டி கிரெண்டோமின் பந்து வீச்சில் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரொஷேன் சில்வா ஜோடி, ஆட்டநேர நிறைவு வரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்கமால் துடுப்பெடுத்தாடியது. இவர்களின் 37* ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தின் உதவியுடன், இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் 27* ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 15* ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்து வீச்சில் டீம் சௌதி 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிரெண்டோம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர். இதேவேளை, நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை எட்டுவதற்கு, இலங்கை அணி, இன்னும் 90 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்




















