கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதான வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த உள்ளக கிரிக்கெட் பயிற்சி அரங்கு இன்று திங்கட்கிழமை (15) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த உள்ளக அரங்கினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே திறந்துவைத்ததுடன், இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் சுகத் திலகரட்ன, கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா உட்பட கிரிக்கெட் சபையின் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
>>இறுதி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் மீளும் அஜாஸ் பட்டேல்
இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு உயர்திறன் கொண்ட பயிற்சிகளை வழங்கும் வகையில் 7 ஆடுகளங்களை உள்ளடக்கியவாறு இந்த உள்ளக பயிற்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளக அரங்கில் மொத்தமாக ஏழு ஆடுகளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இரண்டு ஆடுகளங்கள், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக 2 ஆடுகளங்கள் மற்றும் பொதுவான மூன்று ஆடுகளங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த உள்ளக அரங்கானது சீரற்ற காலநிலையிலும் வீர, வீராங்கனைகள் தடையின்றி தங்களுடைய பயிற்சிகளை முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உள்ளக பயிற்சி அரங்கில் இலங்கை தேசிய ஆடவர், மகளிர், இளையோர் (U19, U17, U15) அணிகளின் வீரர்கள் தங்களுடைய பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த ஆண்டு தொடர்களுக்கான தயார்படுத்தல்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இது அமையும் என்பதுடன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் இந்த பயிற்சி அரங்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















