இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான மற்றுமொரு போட்டியில் ஜப்னா அணியை 5 விக்கெட்டுகளால் தம்புள்ள அணி வீழ்த்தியது.
கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோவின் அபார பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ள அணி, அணித் தலைவர் மினோத் பானுக (67) மற்றும் ரனித லியனாரச்சி (51) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் யசிரு றொட்ரிகோ 3 விக்கெட்டுக்களையும், நிபுன் மாலிங்க, ஏஷான் மாலிங்க மற்றும் திலும் சுதீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 151 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நவோத் பரணவிதான (64) மற்றும் ரொன் சந்திரகுப்த (67) மற்றும் ரவிந்து பெர்னாண்டோ (64) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து 198 ஓட்டங்களை வெற்றி இக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை போட்டியின் நான்காவது நாளான இன்றைய தினம் (28) தொடர்ந்த தம்புள்ள அணி, சனோஜ் தர்ஷிக ஆட்டமிழக்காமல் அரைச் சதம் கடந்து பெற்றுக்கொண்ட 55 ஓட்டங்கள் மற்றும் அணித் தலைவர் மினோத் பானுகவின் அரைச் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
இதன்படி, 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய தம்புள்ள அணி, இம்முறை போட்டித் தொடரில் முதல் வெற்றியை ருசிக்க, ஜப்னா அணி முதல் தோல்வியை சந்தித்தது.
இதேவேளை, தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 2 போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.