தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

351
National Sports Council
Image Courtesy: Namal Rajapaksha Twitter

தேசிய விளையாட்டுப் பேரவையினால் 2021ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அந்த வருடத்துக்கான வரவு-செலவு திட்டம் என்பன இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பேரவையின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே 2021இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

>> விளையாட்டு அபிவிருத்திக்கு மஹேலவுடன் கைகோர்க்கும் டயலொக் நிர்வாகி

இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்

“எமது நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை இனங்காண்பதற்கு 20 சதவீதமான வேலைத்திட்டங்களை முடித்துள்ளோம். வீரர்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

அத்துடன், இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவருமான மஹேல ஜயவர்தன வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

விளையாட்டிற்கான ஒரு கட்டமைப்பையும், திட்டத்தையும் உருவாக்குவதற்கான உறுதியான பணிக்காக ஒன்றிணைந்த தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

>> தேசிய விளையாட்டுப் பேரவைக்கு பெருமை சேர்க்கும் சட்டத்தரணி ரோவேனா

இலங்கை விளையாட்டின் அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பேரவையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முடிந்ததுடன், உண்மையில் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என குறிப்பிட்டிருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தலைமையிலான 14 பேர் கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவையில் குமார் சங்கக்கார, டிலன்த மாலகமுவ, ஜூலியன் போலிங் உள்ளிட்ட இலங்கைக்கு பெருமை சேர்த்த முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மறுபுறத்தில் மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<