இலகு வெற்றியுடன் பிளே ஒப் வாய்ப்பை அதிகரித்த றோயல் செலஞ்சர்ஸ்

96

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 60ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது, ராஜஸ்தான் றோயல்ஸை 112 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த வெற்றியுடன் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் தமது 6ஆவது வெற்றியைப் பெற்றுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, IPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு செல்வதற்கான தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

விதுசனின் அபார பந்துவீச்சுடன் மீண்டும் ஜப்பானை வீழ்த்திய இலங்கை!

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (14) ஜெய்ப்பூரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய அவ்வணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தனர்.

அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவரான டூ பிளேசிஸ் 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுக்க, கிளன் மெக்ஸ்வெல் 33 பந்துகளை எதிர் கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அடம் ஷம்பா மற்றும் KM ஆசிப் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை இழந்ததோடு 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 59 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது. அத்துடன் இது IPL போட்டிகள் வரலாற்றில் அணியொன்று பெற்ற மூன்றாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவானது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சிம்ரோன் ஹெட்மேயர் 19 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுக்க, வேய்ன் பார்னல் 3 விக்கெட்டுக்களையும், கர்ண் சர்மா மற்றும் மைக்கல் பிரஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின்

போட்டியின் சுருக்கம்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 171/5 (20) டு பிளேசிஸ் 55(44), கிளன் மெக்ஸ்வெல் 54(33), அடம் ஷம்பா 25/2(4)

ராஜஸ்தான் றோயல்ஸ் – 59 (10.3) வேய்ன் பர்னல் 10/3(3), மைக்கல் பிரஸ்வெல் 16/2(3), கர்ண் சர்மா 19/2(1.3)

முடிவு – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 112 ஓட்டங்களால் வெற்றி 

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<