உபாதைகளால் தடுமாறும் இலங்கை அணி

ICC T20 World Cup 2022

2474

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்றில் ஆடி வருகின்ற இலங்கை அணி தற்போது காயங்களால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இதில் இடது கை வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிரான செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற போட்டியின் பிறகு மேலும் மூன்று வீரர்கள் காயங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதில் துஷ்மன்த சமீர, தனது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை வீசிய போது தீடீரென காயத்துக்குள்ளானார். இதனையடுத்து அவர் 4ஆவது ஓவரைப் பூர்த்தி செய்யாமல் ஓய்வறைக்கு திரும்ப அவரது ஓவரை தசுன் ஷானக பூர்த்தி செய்தார்.

ஆசியக் கிண்ணத்துக்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் துஷ்மன்த சமீர கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு ஆசியக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போனது. கடந்த ஓராண்டாக இலங்கையின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்த துஷ்மன்த மீண்டும் அதே கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக இலங்கை அபார வெற்றி

எவ்வாறாயினும், காயத்தின் தீவிரம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், துஷ்மன்த சமீரவின் காயத்தை மதிப்பிடுவதற்காக நாளை (19) காலை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவப் பிரிவின் தலைவர் பேராரிசியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். இதன் முடிவைப் பொறுத்து அவர் T20 உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நெதர்லாந்து அணிக்கெதிராக நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள தீர்மானமிக்க போட்டியில் அவர் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சிய அணி இன்னிங்ஸின் பிற்பகுதியில் ப்ரமோத் மதுசானும் காயம் காரணமாக மைதானத்திற்கு வெளியே இருந்தார், அதே நேரத்தில் தனுஷ்க குணதிலக்க நேற்று மாலை இடம்பெற்ற பயிற்சியின் போது அவரது தொடை தசையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவருக்கு ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இதன்படி, ப்ரமோத் மதுசான் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் நாளைய தினம் ஸ்கேன் பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், துஷ்மன்த சமிரவின் காயம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், தனுஷ்க குணதிலக்க மற்றும் ப்ரமோத் மதுசான் ஆகியோரின் காயங்கள் அவ்வளவு மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க காயம் காரணமாக ஏற்கனவே T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது துஷ்மன்த சமீரவை இழப்பது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவைக் கொடுக்கும்.

இதேவேளை, நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில், காயங்களிலிருந்து குணமடைந்துள்ள லஹிரு குமார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் விளையாடுவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<