பயிற்றுவிப்பாளர் ரூமிக்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தடை விதிப்பு

701
Mohamed Roomy

பல கிண்ணங்களை வென்ற இலங்கையின் பிரபல அணிகளான கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணி மற்றும் கொழும்பு கால்பந்து கழக அணிகளின் தலைமை பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமிக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தால் மூன்று போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த 216ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கொத்மலே கிண்ண இறுதிப் போட்டியின்போது முறையற்ற விதத்தில் நடந்துகொண்டமையினாலேயே அவருக்கு மூன்று போட்டிகளுக்கான தடை மற்றும் 5,௦௦௦ ரூபாய் அபராதம் என்பன விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை இலங்கை கால்பந்து சம்மேளத்தின் ஒழுக்காற்றுக் குழு மேற்கொண்டுள்ளதுடன், இலங்கை கால்பந்து சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்படுகின்ற அனைத்து கால்பந்து போட்டிகளுக்கும் இந்த தடை பொருந்தும்.

இது குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை செயல் அதிகாரி U.L. ஜஸ்வர் thepapare.com இடம் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், இதற்கு முன்னதாகவும் இலங்கை இராணுவப்படை அணிக்கும் கொழும்பு கால்பந்து அணிக்கும் இடையிலான 2014/2015ஆம் பருவகால FA கிண்ண அரையிறுதி போட்டிகளின் போது ரூமியின் நடத்தை குறித்து அவருக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் பாடசாலைகளுக்கு இடையிலான குறித்த இறுதிப் போட்டியில் நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக அளவுக்கதிகமான எதிர்ப்பினை தெரிவித்ததோடு, மைதானத்தில் கிழே கிடந்த தண்ணீர் போத்தலையும் அவர் உதைக்க, அது எதிரணியின் தொழில்நுட்ப பகுதிக்குள் விழுந்தது. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நடுவர்கள் இது குறித்த புகார் ஒன்றினை ஒழுக்காற்று குழுவுக்கு அளித்தமையினால், குறித்த விடயம் சமந்தமாக விசாரணை நடத்தியதன் பின்னர் மேற்குறித்த தண்டனையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

எங்களுக்கு யாருடைய தொழில் வாழ்க்கையையும் பாழாக்க வேண்டிய அவசியம் இல்லை, எனினும் நடத்தை என்பது எவரும் பின்பற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும். அவர் முன்னிலை பயிற்சியாளர் ஒருவரும் கூடஎன ஜஸ்வர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஸாஹிரா கல்லூரிக்கும் யாழ் புனித பத்திரியார் கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில், ஸாஹிரா கல்லூரி அணி 3- என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்த நிலையில், அவ்வணிக்கு நடுவரால் கோர்னர் உதை ஓன்று வழங்கப்பட்டது.  அந்த சமயம் பயிற்சியாளர் ரூமியின் போட்டித் தந்திரோபாய முறைக்கு அமைய, கிழே உள்ள காணொளியில் நடைபெறுவது போல் செயல்படுத்தப்பட்டது.

இதன்போது, ஷப்ரான் சதார் (ரூனி) கோனர் உதை கோட்டிற்கு வெளியே பந்தினை வைக்க முஹம்மத் ஷஹீல் (ஜிக்ஸ்) பந்தை விளையாடுவதற்கு வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் நடுவர் அசந்த டயஸ், நேரத்தினை வீணடிப்பதாக நினைத்து மஞ்சள் அட்டையினை காண்பித்தார். இதன் காரணமாகவே பொறுமை இழந்த ரூமி சொற்பிரயோகங்கள் மற்றும் தேவையில்லாத நடவடிக்கை மூலம் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

”போட்டி விதிகள் தற்போது மாற்றம் அடைந்துள்ளன. போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, எதிரணி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை உன்னிப்பாகவும் அவதானமாகவும்  கவனித்து கொண்டிருக்க வேண்டும் என்று போட்டி விதிகள் தெளிவாக சொல்கின்றன.

யாரும் மாயாஜாலங்கள் செய்ய முடியாது. அத்துடன் இது மாதிரியான சம்பவங்களுக்கு இடங்கொடுக்க முடியாது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவுருத்தியுள்ளது” என்றும் ஜஸ்வர் வலியிறுத்தினார்.

எவ்வாறெனினும், குறித்த தீர்மானம் எட்டப்படுவதற்கு முன்னர் மொஹமட் ரூமி எவ்விதமான விசாரணைகளுக்கும் அழைக்கப்படவில்லை எனவும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் விதிகளுக்கமைய வழிமுறைகள் பின்பற்ற படவில்லை எனவும் thepapare.comக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும், ”அவர்கள் என்னை தடை செய்துள்ளதாக சொன்னாலும், அது குறித்த எழுத்து மூலமான உத்தியோகபூர்வ கடிதம் தனக்கு கிடைக்கவில்லை” என்று மொஹமட் ரூமி thepapare.com இடம் தெரிவித்தார்.