சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் திடீர் விலகல்

Champions Trophy 2025

36
Mitchell-Marsh

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்திருந்த சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரானது இம்மாதம் 19ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது. கராச்சியில் நடைபெறுகின்ற முதல் போட்டியில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்த நிலையில், இந்த தொடருக்கான அவுஸ்திரேலியா அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த அறிவிப்பை அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதுகு வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணங்களால் மிட்செல் மார்ஷ், ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளார். காயத்திற்கு தேவையான சிகிச்சைகளை மிட்செல் மார்ஷ் மேற்கொண்ட நிலையிலும், அவரால் முழு உடற்தகுதியை எட்ட முடியாத காரணத்தால் தேசிய தேர்வுக் குழு மற்றும் அணியின் மருத்துவக் குழு இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக மிட்செல் மார்ஷ் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையும் வரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மிட்செல் மார்ஷுக்குப் பதிலான மாற்று வீரரை அறிவிக்க அந்நாட்டு தேர்வுகுழு ஆர்வம் காட்டி வருகிறது. அதனடிப்படையில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட அணியை கொடுக்கப்பட்டுள்ள காலகெடுக்குள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அறிவிக்கும்’ என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய மிட்செல் மார்ஷ், அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் பிக் பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடி அவர், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இந்தியாவில் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரிலும் மிட்செல் மார்ஷ் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே காயம் காரணமாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ் சம்பியன்ஸ் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் தவைராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அண்மையில் நிறைவடைந்த பார்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம்பிடித்த நிலையில், மெத்யூ ஷோர்ட், ஆரோன் ஹார்டி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி விபரம்: பாட் கம்மின்ஸ் (தலைவர்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மெத்யூ ஷோர்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா

அவுஸ்திரேலியா அணியின் போட்டி அட்டவணை

பெப்ரவரி 22 – அவுஸ்திரேலியா எள இங்கிலாந்து, லாகூர்

பெப்ரவரி 25 – அவுஸ்திரேலியா எள தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி

பெப்ரவரி 28 – அவுஸ்திரேலியா எள ஆப்கானிஸ்தான், லாகூர்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<