உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு மற்றுமொரு இழப்பு

137

நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சு சகலதுறைவீரரான மைக்கல் பிரஸ்வெல் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுப்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

தற்போது இங்கிலாந்தில் T20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் விளையாடி வந்த மைக்கல் பிரஸ்வெல் குதிகால் தசை உபாதைக்கு முகம் கொடுத்திருக்கின்றார். மைக்கல் பிரஸ்வெல் இந்த உபாதையில் இருந்து குணமடைய ஆறு தொடக்கம் எட்டு வாரங்கள் வரை தேவை என வைத்தியர்கள் கணக்கிட்டிருக்கும் நிலையில் மைக்கல் பிரஸ்வெல், நியூசிலாந்து அணிக்காக உலகக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பினை இழப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே நியூசிலாந்து அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்டவீரருமான கேன் வில்லியம்சன் உபாதை காரணமாக உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகமாகியிருக்கும் நிலையில் பிரஸ்வெலின் உபாதையும் நியூசிலாந்து அணிக்கு பேரிழப்பாக மாறியிருக்கின்றது.

நியூசிலாந்தின் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கேரி ஸ்டேட், பிரஸ்வெலின் உபாதை குறித்து கவலை வெளியிட்டிருப்பதோடு வீரர்கள் உலகக் கிண்ணம் போன்ற தொடர் ஒன்றினை உபாதை காரணமாக தவறவிடுவது வருத்தம் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்; இலங்கை குழாம் அறிவிப்பு

கடந்த ஆண்டிலேயே மைக்கல் பிரஸ்வெல் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் அறிமுகம் பெற்ற போதும் அவர் அறிமுகமானதன் பின்னர், அணியின் நம்பிக்கைகுரிய வீரராக மாற்றம் பெற்று வருகின்றார்.

இதுவரை நியூசிலாந்து அணிக்காக 19 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் இரண்டு சதங்கள் அடங்கலாக 42.50 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 510 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<