இலங்கை அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தரை நியமிக்க திட்டம்

44

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரபல தென்னாபிரிக்க பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரை ஒப்பந்தம் செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானித்திருப்பதாக ThePapare.com இற்கு தெரியவருகிறது.

இலங்கை பயிற்சியாளர் பதவிக்கு இங்கிலாந்தின் மார்க் ராம்பிரகாஷை நியமிப்பதற்கு ஆரம்பக்கட்ட உடன்படிக்கைகள் எட்டப்பட்ட நிலையில் அவர் அந்த பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்தே 51 வயதான ஆர்த்தரின் பெயருக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிறைவேற்றுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

முன்னதாக 2005 தொடக்கம் 2010 வரை தென்னாபிரிக்க பயிற்சியாளராக செயற்பட்ட ஆர்த்தர் 2011 தொடக்கம் 2013 வரை அவுஸ்திரேலிய பயிற்சியாளராகவும் மிக அண்மையில் மூன்று ஆண்டு ஒப்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாகிஸ்தான் பயிற்சியாளராக செயற்பட்டார்.

டெஸ்ட் அரங்கில் முரளிதரனுக்கு இணையான சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஷ்வின்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட்…..

ஆர்த்தரின் பயிற்சியின் கீழ் டி-20 தரவரிசையில் பாகிஸ்தான் முதல் நிலை அணியாக முன்னேற்றம் கண்டதோடு, அந்தக் காலப்பிரிவில் பாகிஸ்தான் அணி 37 போட்டிகளில் 30 இல் வெற்றியீட்டியது. எவ்வாறாயினும், ஆர்த்தரின் கீழ் பாகிஸ்தான் அணி 28 டெஸ்ட் போட்டிகளில் 17 இல் தோற்றது அவருக்கு பாதகமாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் அவரது பயிற்சியில் உச்சகட்டமாக 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வென்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு கடைசியில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்தின் சுப்பர் ஸ்மாஷ் டி20 தொடருக்கு சென்ட்ரல் ஸ்டாக்ஸ் அணிக்கு பயிற்சியாளராக கடந்த செப்டெம்பரில் ஆர்த்தர் அறிவிக்கப்பட்டார். எவ்வாறாயினும் அவர் இலங்கை அணியுடன் இணையும் பட்சத்தில், இந்த நியமனத்தில் இருந்து அவர் விலகிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அடுத்த தொடருக்கு கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஆர்த்தருக்கு பதிலாக அந்த அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.   

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் இலங்கை தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக்க ஹத்துருசிங்க நீக்கப்பட்ட பின்னர் முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் ரத்னாயக்க தொடர்ந்து பயிற்சியாளராக செயற்படவுள்ளார். இதில் பதவி நிலைமாற்றத்தை இலகுபடுத்துவதற்காக ஆர்த்தர் ஒரு பயிற்சியாளர் ஆலோசகராக செயற்பட வாய்ப்பு உள்ளது.

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண தொடர் முடியும் வரையான காலத்திற்கு ஆர்த்தர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

ஹத்துருசிங்கவின் ஒப்பந்தத்தை நீக்கியது அல்லது ஆர்த்தரை தலைமை பயிற்சியாளராக நியமிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<