சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய முன்னணி நடுவர்

94
Marais Erasmus

தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த கிரிக்கெட் போட்டி நடுவரான மரைஸ் எரஸ்மஸ் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

>> பங்களாதேஷ் T20I தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அந்தவகையில் மரைஸ் எரஸ்மஸின் இறுதி சர்வதேச போட்டியாக நியூசிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் இடையில் தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அமைகின்றது 

60 வயது நிரம்பிய மரைஸ் எரஸ்மஸ் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) முன்னணி நடுவர்கள் குழாத்தில் (ICC Elite Panel) ஒருவராக அங்கம் வகிப்பதோடு இதுவரை 80 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 43 T20I போட்டிகள் அடங்கலாக 18 மகளிர் சர்வதேச போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20I போட்டி ஒன்றின் மூலம் கிரிக்கெட் போட்டிகளை மத்தியஸ்தம் செய்ய ஆரம்பித்த மரைஸ் எரஸ்மஸ், ICC இன் சிறந்த நடுவருக்கான விருதினை மூன்று ஆண்டுகளுக்கு (2016, 2017 மற்றும் 2021) வென்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ICC இன் சிறந்த நடுவருக்கான விருதுகளை அதிக தடவைகள் வென்ற நடுவர்களில் இரண்டாம் இடத்திலும் மரைஸ் எரஸ்மஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> பங்களாதேஷ் அணியுடன் இணையும் 2 பயிற்சியாளர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக மாறுவதற்கு முன்னர் ஒரு வேகப்பந்துவீச்சாளராக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருந்த மரைஸ் எரஸ்மஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு வழங்கிய போதிலும் உள்ளூர் போட்டிகளுக்கு தொடர்ந்து நடுவராக செயற்பட விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<