தனது இடத்தை பெறும் பந்து வீச்சாளருக்கு அறிவுரை வழங்கிய ரங்கன ஹேரத்

485

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வுபெற்ற பின்னர், டெஸ்ட் போட்டிகளில் அவரின் இடத்தை பூர்த்திசெய்யும் முதன்மை வீரராக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார பேசப்பட்டு வந்தார்.

இலங்கை அணியில் இருந்து விலகும் சந்திமால்: அசலங்க அணியில் இணைப்பு

முதற்தர போட்டிகளில் 668 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், ரங்கன ஹேரத்துக்கு அடுத்தப்படியாக இலங்கை டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சுக்கு பலம் சேர்ப்பார் என்பதை, ரங்கன ஹேரத்தும் அவரது ஓய்வின் போது கூறியிருந்தார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள மலிந்த புஷ்பகுமார, ரங்கன ஹேரத் கூறிய அறிவுரைகளையும், டெஸ்ட் அணிக்கு வழங்கவுள்ள பங்களிப்பு தொடர்பிலும், எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கன ஹேரத் வழங்கிய அறிவுரைகள் தொடர்பில் மலிந்த புஷ்பகுமார குறிப்பிடுகையில்,

ரங்கன ஹேரத் ஒவ்வொரு முறையும் என்னுடன் கலந்துரையாடுவார். வீரர் ஒருவர் எப்படியான துடுப்பாட்ட முறைகளை பயன்படுத்துகிறார், அதனை அறிந்து எவ்வாறு பந்து வீசுவது என்பது தொடர்பில் கூறியுள்ளார்.  நான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது, ரங்கன ஹேரத் அணியில் இருந்தார். அதன்போது எனக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளதுடன், பயிற்சியின் போதும் எனது பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்வதற்கான யுத்திகளை கூறியுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் போது, சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் எவ்வாறு உளவியல் ரீதியாக செயற்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்களை என்னுடன் அவர் பகிர்ந்துக்கொள்வார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

ரங்கன ஹேரத்தின் இடம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் (புஷ்பகுமாரவின்) அணிக்கான பங்களிப்பு எவ்வாறு இருக்கும்?

எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்.  அதன்மூலம் அணிக்கு என்னால் எந்தளவு பங்களிப்பை வழங்க முடியுமோ அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். நான் எப்பொழுதும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் எனது பந்துவீச்சை நிரூபிக்க முடியும் என நினைக்கிறேன்

பல்லேகலை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா?

பல்லேகலை மைதானத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் போது ஆடுகளமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமான ஆடுகளமாக இருக்கவில்லை. தென்னாபிரிக்க தொடரிலும் அதனை நாம் பார்க்க முடிந்தது.

எனினும், இந்தப் போட்டிக்கு எவ்வாறான ஆடுகளம் வழங்கப்படும் என்பது எமக்கு தெரியாது. எவ்வாறான ஆடுகளம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்என்றார்.

மலிந்த புஷ்பகுமார 117 முதற்தர போட்டிகளில் விளையாடி 668 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இறுதியாக கடந்த வருடம் பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்ததுடன், அதன்போது 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (14) கண்டிபல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க