முதல்தரப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் வீழ்த்திய ரங்கன ஹேரத்

404

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான நான்கு போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (26) நிறைவுக்கு வந்தன.

இதில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் துஷான் விமுக்தி, சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரமோத் மதுவன்த, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் பிரியமால் பெரேரா மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் சுப்பர் 8 சுற்றுக்கான மூன்றாம் நாள் ஆட்டங்களில் சதங்களைப் பெற்று அசத்த, தமிழ் யூனியன் கழகத்தின் ரங்கன ஹேரத், SSC கழகத்தின் தரிந்து ரத்னயாக்க, NCC கழகத்தின் லசித் அம்புல்தெனிய மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் சாகர் பரேஷ் ஆகியோர் சுழலில் மிரட்டியிருந்தனர்.

மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்றும் தரங்க

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்கவில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்சை தொடர்ந்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 324 ஓட்டங்களைக் குவித்தது. கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் வனிந்து ஹசரங்க சதம் கடந்து 106 ஓட்டங்களையும், மலிந்து மதுரங்க (65) மற்றும் மாதவ வர்ணபுர (54) ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் தமிழ் யூனியன் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற 40 வயதான ஹேரத், முதற்தடவையாக முதல்தரப் போட்டிகளில் களமிறங்கி தனது அபார பந்துவீச்சின் மூலம் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து 81 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ் யூனியன் அணி, போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405 (127.5) – தரங்க பரணவிதாரன 215*, தமித சில்வா 72, லஹிரு மதுஷங்க 3/54, அஷான் பிரியன்ஞன் 2/49, வனிந்து ஹசரங்க டி சில்வா 2/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 324 (89.2) – வனிந்து ஹசரங்க 106, மலிந்து மதுரங்க 65, மாதவ வர்ணபுர 54, ரங்கன ஹேரத் 5/71, சச்சித்ர சேரசிங்க 2/43, திலங்க உதேஷன 2/59

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 177/6 (50) – ரமித் ரம்புக்வெல்ல 63, யொஹான் மெண்டிஸ் 34*, லஹிரு கமகே 2/36, லஹிரு மதுஷங்க 2/38


SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஒன் (follow on) முறையில் துடுப்பெடுத்தாடிவரும் இராணுவ விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க மேலும் 114 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

மற்றுமொரு இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரில் முன்னேறும் இலங்கை A அணி

கௌஷால் சில்வாவின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் SSC கழகம்,  முதல் இன்னிங்ஸில் 582 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இன்று தமது முதல் இன்னிங்ஸை 128 ஓட்டங்களுடன் தொடர்ந்த இராணுவ அணி, 321 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அவ்வணிக்காக சகலதுறை ஆட்டக்காரர் துஷான் விமுக்தி 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 22 வயதுடைய வலதுகை சுழல் பந்துவீச்சாளர் தரிந்து ரத்னாயக்க 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து பலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பாட பணிக்கப்பட்ட இராணுவ அணி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 144 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் லக்ஷித மதுஷான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 582/9d (114.5) – கௌஷால் சில்வா 273, கவிந்து குலசேகர 94, சதுன் வீரக்கொடி 52, சச்சித்ர சேனாநாயக்க 42, துஷான் விமுக்தி 5/155, விராஜ் புஷ்பகுமார 2/141

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.5) – துஷான் விமுக்தி 133, அஷான் ரன்திக 35, லக்‌ஷான் எதிரிசிங்க 30, தரிந்து ரத்னாயக்க 5/97, தம்மிக பிரசாத் 3/72

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 144/2 (41) – லக்‌ஷித மதுஷான் 80*, துஷான் விமுக்தி 25


NCC எதிர் செரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இன்று 309 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த செரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 457 ஓட்டங்களைக் குவித்தது. செரசென்ஸ் அணி சார்பாக இளம் துடுப்பாட்ட வீரரான பிரமோத் மதுவன்த 116 ஓட்டங்களை விளாச, அஷேன் பண்டார, கமிந்து கனிஷ்க மற்றும் நிபுன் கருணாநாயக்க ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் NCC அணிக்காக லசித் அம்புல்தெனிய 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி, மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் லஹிரு உதார ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 93 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 253 (87.3) – மஹேல உடவத்த 101, சாரங்க ராஜகுரு 38, சாமிகர எதிரிசிங்க 4/82, மொஹமட் டில்ஷாட் 2/25

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 457 (142.3) – பிரமோத் மதுவன்த 116, கமிந்து கனிஷ்க 81, அஷேன் பண்டார 78, நிபுன் கருணாநாயக்க 55, லசித் அபுல்தெனிய 96/6, டிலேஷ் குணரத்ன 2/83

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 165/2 (38) – லஹிரு உதார 93*, ஹசித போயகொட 34


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

ஓசத பெர்னாண்டோ அடுத்தடுத்து பெற்ற இரண்டாவது சதத்தின் உதவியுடன் கோல்ட்ஸ் அணிக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியுள்ளது.

2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கோல்ட்ஸ் அணி 308 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அவ்வணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் துடுப்பாட்ட வீரரான பிரியமால் பெரேரா கடைசிவரை களத்தில் இருந்து 107 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதுடைய சாகர் பரேஷ் 84 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து 252 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சிலபாம் மேரியன்ஸ் கழகம் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது 233 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையை அடைந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய ஓசத பெர்னாண்டோ, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்து 112 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (133) – ஹர்ஷ குரோ 162, ஓசத பெர்னாண்டோ 109, திக்‌ஷில டி சில்வா 79, யசோதா லங்கா 75, சங்கீத் குரே 4/105

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 308 (88.2) – பிரியமால் பெரேரா 107, ஹஷான் துமிந்து 68, தனன்ஞய லக்‌ஷான் 32, சாகர் பரேஷ் 5/84, சதுரங்க குமார 2/56

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 233/2 (46) – ஓசத பெர்னாண்டோ 112*, யசோத லங்கா 55

நான்கு போட்டிகளினதும் நான்காவதும் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<