இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் எமர்ஜிங் லீக் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்று காலிறுதிப் போட்டிகள் இன்று (14) நிறைவுக்கு வந்தன.
இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் NCC கழகத்துக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான லசித் எம்புல்தெனிய 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பிரகாசித்திருந்தார்.
விமானப்படை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் அணி
இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் எமர்ஜிங்…
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC
கோல்ட்ஸ் கழக மைதானத்தில் இன்று (14) நிறைவுக்கு வந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி, லசித் குரூஸ்புள்ளேயின் சதம் (134) மற்றும் ரிசித் உபமால் (56), டில்ஷான் சஞ்சீவ (55) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் 67.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றது.
NCC அணி சார்பில் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய NCC அணியினர் 85.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றனர்.
NCC அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரவிந்து பெர்னாந்து 77 ஓட்டங்கள் குவிக்க, பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
தொடர்ந்து 102 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் மீண்டும் அசத்திய லசித் குரூஸ்புள்ளே 65 ஓட்டங்களை எடுத்ததுடன், NCC அணி சார்பில் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இதனையடுத்து 242 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி, சகல விக்கெட்டுக்களையும் 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
NCC அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ராகுல் ரதேஷ் 54 ஓட்டஙகளை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இறுதியில் 70 ஓட்டங்களால் வெற்றியீட்டிய சிலாபம் மேரியன்ஸ் அணி, அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (67.1) – லசித் குரூஸ்புள்ளே 134, றிசித் உபமல் 56, டில்ஷான் சஞ்சீவ 55, லசித் எம்புல்தெனிய 4/86
NCC (முதல் இன்னிங்ஸ்) – 221 (85.5) – ரவிந்து பெர்னாந்து 77, சமோத் சந்தரு 43, நிமேஷ் விமுக்தி 3/57, லசித் குரூஸ்புள்ளே 2/29
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 140 (40.2) – லசித் குரூஸ்புள்ளே 65, நிம்சர அத்தரகல்ல 30, லசித் எம்புல்தெனிய 5/56, சமித் ரங்க 2/05, திவங்க கெக்குலவல 2/24
NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 172 (51) – அஷான் லொகுகட்டிய 49, ராகுல் ரதேஷ் 54, நிமேஷ் விமுக்தி 5/56, லசித் குரூஸ்புள்ளே 2/64
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 70 ஓட்டங்களால் வெற்றி
SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
கிரிஷான் சஞ்சுலவின் அபார சதம் மற்றும் ஆகாஷ் சேனாரத்னவின் அசத்தல் பந்துவீச்சினால் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் SSC கழகம் 11 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய SSC கழகம் 121 ஓட்டங்களையும், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 152 ஓட்டங்களையும் முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டது.
31 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த SSC கழகம் கிரிஷான் சஞ்சுலவின் சதம் (102) மற்றும் சொஹான் டி லிவேரா (92), திலான் பிராஷான் (75) அரைச் சதங்களின் உதவியுடன் 66.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது.
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் சதீஷ் பத்திரனகே 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், 78.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 272 ஓட்டங்களை எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களைக் வீழ்த்திய ஆகாஷ் சேனாரத்ன இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, 11 ஓட்டங்களால் வெற்றியீட்டிய SSC கழகம் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 121 (36.1) – சொஹான் டி லிவேரா 28, பசிந்து சூரியபண்டார 21, சுபுன் கவிந்த 4/22, தமித்த சில்வா 4/31
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (45.5) – யொஹான் மெண்டிஸ் 63, தமித்த சில்வா 24, ஆகாஷ் சேனாரத்ன 4/42
SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 314 (66.3) – கிரிஷான் சஞ்சுல 102, சொஹான் டி லிவேரா 92, திலான் பிரஷான் 75, சதீஷ் பதிரனகே 5/59
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 272 (78.4) – கமேஷ் நிர்மால் 88, தமித்த சில்வா 48, ஆகாஷ் சேனாரத்ன 3/39
முடிவு – SSC கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி
ஓமானிடம் தோல்வியடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு…
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
NCC அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை கழகம் முதல் இன்னிங்சுக்காக 66 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய கடற்படை அணியினர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். இராணுவப்படை சார்பாக பந்துவீச்சில் கவிந்து குலரத்ன 17 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதன் பின்னர் 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இராணுவப்படை கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் பெதும் குமார 80 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள பந்துவீச்சில் சவிந்து பீரிஸ் 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
261 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பாடிய கடற்படை கழக அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
இறுதியில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இராணுவ கிரிக்கெட் கழகம், அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 139 (66) – கிஹான் கோரலகே 31, சவிந்து பீரிஸ் 3/41
கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 93 (47.2) – கவிந்து குலரத்ன 6/17, ஹன்ச டி சில்வா 4/23
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 215 (92.2) – பெதும் குமார 80, கிஹான் கோரலகே 42, சவிந்து பீரிஸ் 5/65
கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 119/6 (22) – லலித் பெர்னாண்டோ 30, கிஹான் கோரலகே 4/24
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு (முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்ற இராணுவ கழகம் அரை இறுதிக்குத் தகுதி)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<