நாம் அனைவரும் தலைவர்களாக பிறப்பதில்லை. உலகிலுள்ள அனைவரும் தலைவர்கள்தான். ஆனால் தலைவர் என்பது குறிப்பிட்ட காலப்பகுதியில் நபரொருவர் பெற்றுக்கொள்கின்ற அனுபவத்துடன் முன்னெடுத்துச் செல்கின்ற திறமைகளைக் கொண்டவர்கள்தான் தலைவர்களாக விளங்குவார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

வின்டேஜ் கிரிக்கெட்டர்ஸ் அமைப்பினால் இலங்கையில் உள்ள 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட விசேட ஒருநாள் கருத்தரங்கு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மஹேல ஜயவர்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”தலைமைத்துவம், வீரர்களுக்கு இடையிலான சமத்துவம் மற்றும் விளையாட்டு முகாமைத்துவம் ஆகியன எனக்கு இங்கு வழங்கப்பட்ட தலைப்பாகும்.

நாங்களும் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகுதான் தேசிய அணிக்குள் இடம்பெற்று நாட்டுக்காக விளையாடி கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தோம். எனினும், நாம் கடந்த காலங்களில் பாடசாலை மட்டத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்குக் தேவையான அறிவுரைகளைவும், ஆலோசனைகளையும் வழங்க மறந்துவிட்டோம். இதனால் இன்று பாடசாலையிலிருந்து வெளியேறுகின்ற வீரர்களின் நடத்தையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சிறந்த வீரரொருவரை உருவாக்கும் நோக்கில் அதற்கான பங்களிப்பினை வழங்குவது எமது கடமையாகும். இதில் முதலாவதாக தலைமைத்துவம் என்றால் என்பது பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

நான் தலைமைத்துவத்தை பரந்தளவில் நோக்குகிறேன். பாடசாலை வீரரொருவருக்கு தலைமைத்துவத்தை எவ்வாறு வழங்குவது, அவ்வாறு வழங்கப்பட்ட பொறுப்பை நேர்மையுடனும், 100 சதவீத பொறுப்புடனும் தனக்கு கீழ் உள்ள சக வீரர்களுக்கு சரியான வழிகாட்டலை வழங்குவதுதான் சிறந்த தலைவர் ஒருவரின் நல்ல குணாதிசயமாக இருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்ல பண்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். அதுதான் எமது முதல் படியாகும். எமது கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலம் நல்ல பண்புகளிலிருந்துதான் கட்டியெழுப்பப்படுகின்றது. எனவே அவ்வாறான நற் பண்புகளை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது எம் அனைவரதும் பொறுப்பாகும்.

ஒரு சிறந்த தலைவர் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். தான் செய்வது என்ன? தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது பற்றி தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு சிறந்த தலைவருக்கு ஒருபோதும் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது என்பதுடன் தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அமைய  செயற்படவும் முடியாது. எனவே எப்போதும் அவர் வெளிப்படைத் தன்மையுடன் தான் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வுக்கு சங்கக்காரவுக்கு அழைப்பு

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவை..

அத்துடன் கிரிக்கெட் விளையாட்டு என்பது குழுவாக விளையாடுகின்ற விளையாட்டாகும். தனியொரு நபரால் மாத்திரம் வெற்றி பெற முடியாது. அதேபோல வெற்றி தோல்விகளை அணியில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். எனவே தலைவரும் அந்த அபிப்பிராயத்துடன் செயற்பட்டால் மாத்திரமே உண்மையான வெளிப்படைத் தன்மை அங்கு ஏற்படும்.

இதில் இரண்டாவது விடயம் கௌரவம். கௌரவத்தை ஒருபோதும் அதிகாரத்தாலோ அல்லது பலவந்தமாகவோ பெற்றுக்கொள்ள முடியாது. முதலில் நாம் கௌரவத்தை சம்பாதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கௌரவத்தைக் கொடுக்கின்ற அதேநேரம், தானும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் மாத்திரமே எமக்கான கௌரவம் கிடைக்கும். எனவே கௌரவத்தை முதலில் நாம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதில் மற்றவர்களது கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதுதான் 3ஆவது முக்கிய விடயமாகும். குழு விளையாட்டொன்றில் தன்னுடன் இருக்கின்ற சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் ஒருபோதும் தலைவரொருவருக்கு சிறந்த தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது. அத்துடன் ஒரு சிறந்த தலைவர் ஒருவரின் முக்கிய குணாதிசயம் தான் குறைவாக பேசுகின்ற அதேநேரம் மற்றவர்களது கருத்துக்களுக்கு அதிகம் செவி சாய்ப்பவராகவும் இருக்க வேண்டும்.

நான் தேசிய அணியின் தலைவராக கடமையாற்றுகின்ற காலத்தில் அணியின் வெற்றிக்கான வியூகங்களை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்தியிருந்தேன். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளின் இடைநடுவில் அடுத்த 10, 15 ஓவர்கள் பற்றி அதிகம் சிந்திப்பேன். எப்படியாவது போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அப்போது அணியில் விளையாடுகின்ற வயது குறைந்த இளம் வீரரொருவர் வெற்றிக்கான நல்ல யோசனையொன்றை முன் வைக்கலாம். எனவே அவருடைய கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதை நடைமுறைப்படுத்தினால் சிறந்த பிரதிபலனை போட்டியின் முடிவில் எதிர்பார்க்கலாம். இதைத்தான் நாம் இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோல் நாம் எடுக்கும் முடிவில் கற்றுக்கொள்வது என்ன என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் முடிவொன்றை எடுத்து நடைமுறைப்படுத்திய பிறகு இறுதியில் தவறான முடிவொன்று கிடைக்கலாம். ஆனால் தலைவராக தான் எடுத்த முடிவை தவறு என்பதை பொறுப்பேற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் அவருக்கு இருக்கவேண்டும். அதிலும் குறித்த முடிவு வேறொரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னதைத்தான் நான் செய்தேன் என்று அவரை நோக்கி விரலை நீட்டுவது மிகப் பெரிய தவறாகும். எனவே அனைவரது ஏகோபித்த கருத்துக்களின் பிறகு எடுக்கப்பட்ட முடிவு தவறாக இருந்தாலும் அதை தான் முன் நின்று செயற்படுத்தியதை தயங்கமால் இரு கைகளையும் உயர்த்தியவாறு முன் வந்து சொல்பவர்தான் ஒரு சிறந்த தலைவராக கருதப்படுவார். இவ்வாறான பண்புகளை பாடசாலை வீரர்களின் மனதில் புகுத்துவதற்கு முடிந்தால், விளையாட்டுத்துறை முன்னேற்றமடையும் அதேசமயம், வீரர்களின் குணங்களில் மாற்றமும் ஏற்படும்.

அத்துடன் ஒரு பிள்ளை சதம் அல்லது அரைச் சதம் அடித்தவுடன் போட்டியொன்றில் வெற்றிபெற முடியாது. அணியில் உள்ள ஏனைய 10 வீரர்களும் களத்தடுப்பு செய்து, பந்துவீசி, துடுப்பெடுத்தாடி, சதம் குவித்த வீரருக்காக எதிர் திசையில் நிதானமாக விளையாடி ஒத்துழைப்பு வழங்கிய வீரர் மற்றும் வலைப்பயிற்சிகளின் போது அனைத்து வகையிலும் உதவி செய்த பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன்தான் வெற்றிபெற முடியும். அதேபோல் போட்டியின் பிறகு ஆட்டநாயகனாக பதக்கமொன்று கிடைக்கும்போது அதையும் அணியில் உள்ள சக வீரர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதைத்தான் நாம் எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல..

மேலும், அணியில் உள்ள சக வீரரொருவரின் குடும்ப விபரங்கள், எந்த உணவை சாப்பிட அதிக விருப்பம் உள்ளடங்கலாக அவருடைய விருப்பு வெறுப்புக்கள் என்ன என்பது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் சகவீரர் எவ்வாறு விளையாடுவார், அவருடைய பந்துவீச்சுப் பாணி, துடுப்பெடுத்தாடுகின்ற முறை என்பவற்றை நிச்சயம் சகவீரர் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு அணியாக இக்கட்டான சூழ்நிலையிலும் புரிந்துணர்வுடன் விளையாடும் மனப்பாங்கு ஏற்படும். மேலும் எதிரணி வீரர் எவ்வாறு பந்துவீசுவார், அவருடைய மனப்பாங்கு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். வெறும் புத்தகத்தில் உள்ள கிரிக்கெட்டை மாத்திரம் தெரிந்துகொண்டு சர்வதேச மட்டத்திற்கு சென்று ஒருபோது பிரகாசிக்கவும் முடியாது.

மறுபுறத்தில் பாடசாலை கிரிக்கெட்தான் எமது அத்திவாரம் என நாம் தர்க்கமொன்றை முன்வைக்கலாம். பாடசாலையில் இருந்து வந்தவர்கள்தான் தேசிய அணிக்காக விளையாடி உலகக் கிண்ணப் போட்டிகள் விளையாடிவர்கள் என சொல்வார்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு முதல் தரப் போட்டிகளிலும் விளையாடி இருக்கமாட்டார்கள். இதுதான் இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் அமைப்பாக இருந்துவருகின்றது. இதைத்தான் கடந்த 40 வருடங்களாகவும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அதே அத்திவாரத்துடன் 60 மாடிக்கட்டடத்தை உருவாக்குவதற்கே நாம் சிந்திக்கின்றோம். 40 வருடங்களுக்கு முன் இடப்பட்ட அத்திவாரத்தில் வெறும் 20 மாடிகளைக் கொண்ட கட்டடத்தைத்தான் நிர்மாணிக்க முடியும்.

தற்போது புதிய தொழில்நுட்பங்கள், புதிய உபகரணங்கள், புதிய வியூகங்கள் கையாளப்பட்டு வருகின்றன. எனவே காலத்தின் தேவைக்கேற்ப அடுத்த 60 அல்லது 80 மாடி கட்டடத்தை உருவாக்கத் தேவையான புதிய அத்திரவாரத்தை இடுவதற்கான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு இங்குள்ள அனைவரது ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டையும் அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும்.

இறுதியாக விளையாட்டு முகாமைத்துவம் என்பது அணிக்கு பொருத்தமான திறமையுள்ள வீரர்களை இனங்காண்பதாகும். அணியில் உள்ள சக வீரர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் போல, பாடசாலை விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் தமக்கு கீழுள்ள வீரர்கள் தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்களது குடும்ப பின்னணி, மனநிலை, விருப்பு வெறுப்பு உள்ளிட்ட விடயங்களை அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த வீரரொருவரை உருவாக்கி அவரிடமிருந்து 100 சதவீத பிரதிபலனை பெற்றுக்கொள்ளும் அதேநேரம், சிறந்த அணியொன்றையும் கட்டியெழுப்ப முடியும்.

மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு?

மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர்..

எனவே நான் மேற்கூறிய விடயங்களை பாடசாலை வீரர்களுக்கு மத்தியில் கொண்டு சென்றால், நிச்சயம் எமக்கு சிறந்த அணியொன்றை கட்டியெழுப்ப முடியும். இதனால் வீரர்கள் சமத்துவத்துடன் ஒன்றாக விளையாடுவதுடன், சக வீரருடன் முரண்பாடுகளின்றி விளையாடி இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை நான் கடந்த 12 மாதங்களாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கிரிக்கெட் குழுவில் கடமையாற்றி வந்தேன். அதில் பாடசாலை வீரர்களுக்காக கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சான்றிதழில் எந்தவொரு பயனும் கிடையாது. சங்கக்கார, சனத், அரவிந்த போன்ற வீரர்களைப் போல குறித்த பிள்ளை துடுப்பெடுத்தாடுகின்றார்கள் என வர்ணித்து சான்றிதழ் வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக தேசிய அணிக்காக விளையாடுவார்கள் என்றும் தெரிவிப்பார்கள். அதன்பிறகு அந்தப் பிள்ளையின் பெற்றோர்கள் அதிக பணத்தைச் செலுத்தி பிரிதொரு பாடசாலையில் அனுமதிப்பார்கள். தனது பிள்ளையின் கிரிக்கெட் எதிர்காலத்துக்காக அப்பாடசாலையில் உள்ள பயிற்சியாளரையும் வற்புறுத்தி இல்லாததொன்றை நிரூபித்து தேசிய அணிக்காக விளையாடும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இதுதான் இலங்கை கிரிக்கெட் வீழச்சிக்கு முக்கிய காரணமாகும் என்பதை அதிகாரிகள் ஏன் புரிந்துகொள்வதில்லை

எனவே நான் பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு இத்தருணத்தில் சவாலொன்றை விடுக்கிறேன். பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் விரைவில் மாற்றங்களைக் கொண்டு வந்து பொருத்தமான கிரிக்கெட் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி இலங்கை கிரிக்கெட்டுக்கு நட்சத்திர வீரர்களை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் தர்மசேன மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் கலந்துகொண்டு விசேட சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்ககது.