இலங்கை கிரிக்கெட் அணிக்கான திட்டங்கள் குறித்து மஹேல ஜயவர்தன

2679

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளரான மஹேல ஜயவர்தன, தற்போது நடைபெற்று வருகின்ற 2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் திட்டங்கள் குறித்து ThePapare.com இடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

ThePapare.com செய்திகளுக்காக இந்தியாவின் லக்னோவிலிருந்து தமித் வீரசிங்க

உலகக்க கிண்ணத்தில் இலங்கை இதுவரை இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்க இன்னும் ஏழு போட்டிகள் மீதமாக காணப்படுகின்றது. இலங்கையின் எதிர்பார்ப்புக்கள் எப்படி?

ஆம், நீங்கள் எப்போதும் ஒரு உலகக் கிண்ணத்தில் நேர்மறையான தொடக்கம் ஒன்றை பெற வேண்டும் என நான் நினைக்கின்றேன். நாங்கள் தொடரில் சிறப்பான கிரிக்கெட் விளையாடிய வலுவான தென்னாபிரிக்காவை கடந்து வந்திருக்கின்றோம். குறிப்பாக அந்த டெல்லி மைதானம் சிறிய மைதானமாக இருந்தது ஏமாற்றம் என்ற போதிலும், ஆனால் நாங்கள் குறிப்பிட்ட நாளில் ஒரு சிறந்த அணி மூலம் தோற்கடிக்கப்பட்டதை கருத்திற்கொள்ள வேண்டும்.

ஆஸி. மோதலில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முக்கிய இழப்பு

நாங்கள் நேர்மறையான கிரிக்கெட் விளையாடிய போதிலும் பாகிஸ்தான் உடனான போட்டியில் இன்னும் சற்று ஏமாற்றமடைந்தோம். நேர்மறையான கிரிக்கெட் ஆட்டம் நாங்கள் தொடக்கத்திலேயே எமது அணி வீரர்களிடம் கேட்டுக்கொண்ட ஒன்று. ஏனெனில் இந்தியாவில் போட்டிகளுக்காக கொடுக்கப்படும் மைதானங்களுக்கு அவ்வாறான விளையாட்டே பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.

சில நேரங்களில் (நேர்மறையான கிரிக்கெட் அணுகுமுறைக்கு) எமது வீரர்கள் பழக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் நாம் அந்த வகையான அணுகுமுறையை, குறிப்பாக பலவீனமான பந்துவீச்சு வரிசை இருப்பதன் காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனையே நாங்கள் திட்டமிட்டோம், ஆனால் 344 என்கிற வெற்றி இலக்கினை எதிரணி எட்டுவதனை தடுக்க முடியாமல் போனது கவலை தருகின்றது. நாங்கள் பந்து வீச்சில் மோசமாக இருந்ததோடு, குறுகிய பௌண்டரி காணப்படும் இடங்களிலும் தவறுகளை மேற்கொண்டிருந்தோம். அதேநேரத்தில், களத்தடுப்பிலும் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த இரண்டு போட்டிகளிலும் எமது பந்துவீச்சு குறையாக இருந்த போதிலும் நாம் இதனை விட சிறந்த களத்தடுப்பு அணியாக காணப்படுகின்றோம்.

எனவே, இவையே நாம் மேம்படுத்த வேண்டிய விடயங்களாக உள்ளன.  நான் சொன்னதைப் போல, இந்த தொடரின் ஆரம்பத்தில் நமக்கு ஒரு வெற்றி கிடைத்திருந்தாலும் அது சிறப்பாக அமைந்திருக்கும். எனினும் இது ஒரு நீண்ட தொடர் எனவே நாம் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். மீதமுள்ள போட்டிகள் மற்ற அணிகளுடன் எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. எனவே, நமக்கு கட்டுப்படுத்த முடியுமான விடயங்களை நாம் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக முக்கியமான  இரண்டு போட்டிகளில் வெறறி பெறுவதும், இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெறுவது உங்களுக்கு 50 சதவீதம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

தகுதிகாண் சுற்றில், திமுத் ஆரம்பவீரராக வந்தார். இங்கே உலகக் கிண்ணத்தில் குசல் பெரேரா ஆரம்ப வீரராக இருக்கின்றார், அவரினால் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. இந்த மாற்றத்தில் சிக்கல் இருப்பதாக நினைக்கின்றீர்களா?

குசல் (பெரேரா) நியூசிலாந்துக்கு சென்று அங்கே நன்றாக விளையாடினார், பின்னர் மீண்டும் உபாதைக்குள்ளாகியிருந்தார். இதனால் நாங்கள் திமுத் உடன் செல்ல முடிவு செய்தோம், எனவே அவரை மீண்டும் அழைத்தது ஜிம்பாப்வே ஆடுகளங்களில் நடைபெற்ற அந்த தகுதிகாண் போட்டிகளில் ஸ்திர தன்மையினை ஏற்படுத்தியது. அந்த முடிவு திட்ட அடிப்படையில் வெற்றியாக அமைந்தது. நிலைமை என்னவாக இருந்த போதிலும் நாங்கள் திமுத் மீது மீண்டும்  நம்பிக்கை கொள்ள முடியும் என்பதை அறிந்திருந்தோம். பயிற்சிப் போட்டிகளில் கூட குசல் சிறப்பாக செயற்பட்டிருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக முதல் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் எதிர்பார்த்ததனை செய்திருக்கவில்லை. எனவே இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால், திமுத் என்ற அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டவீரர் நம்மிடம் இருப்பது நல்ல விடயமாக காணப்படுகின்றது.  நாங்கள் இரண்டு தெரிவுகளை ஆரம்பத்திலேயே வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு உலகக் கிண்ணத்தில் தெரிவுகளுக்கான நிறைய வாய்ப்புகள் இல்லை. ஆனால் நாங்கள் குசலினை பல இடங்களிலும் உபயோகம் செய்ய முடியும். அவர் சுழலுக்கு நன்றாக விளையாடுவதோடு, ஓட்டங்களை விரைவாக குவிக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றார். உங்களால் மேலதிகமாக அதிக வீரர்களையும் வைத்திருக்க முடியாது. ஒரு துடுப்பாட்ட வீரரினையே மேலதிகமாக வைத்திருக்க முடியும். எனவே திமுத் ஒரு மேலதிக தெரிவாக இருக்கின்றார். தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போட்டியினைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஆடுகளம் எவ்வாறு இருந்தது என்பதும் தெரியும். எனவே நமக்கு முடிவுகளை எடுப்பதற்கு சில நாட்கள் உள்ளன.

இலங்கையின் மத்திய வரிசை ஓட்டங்கள் குவிப்பதில் தடுமாறுகின்றது. ஹைதரபாத் போட்டியில் கூட இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் ஓட்டங்கள் குவிக்கவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

சரி, இதற்கு பதில் வழங்குவது கடினமானது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைகள் வேறுபட்டவை. அண்மைக்காலமாக சரித் (அசலங்க) எங்களுக்கு மிகவும் நல்ல வகையில் ஓட்டங்கள் பெறுபவராக இருக்கின்றார். அவர் எமக்காக தொடர்ச்சியாக ஓட்டங்கள் பெறுபவர்களில் நிலையான ஒருவராக காணப்படுகின்றார். அவருக்கு பந்துக்கு தாக்குப் பிடிக்கும் ஒரு நிலை ஏற்படும் போது அது ஒரு பெரிய இணைப்பாட்டம் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியப்பாட்டினை ஏற்படுத்தும்.

சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்த வனிந்து ஹஸரங்க

தனன்ஞய டி சில்வா கடந்த 12 மாதங்களில் நாங்கள் சரிவுகளைச் சந்தித்த சந்தர்ப்பங்களில் எங்களுக்கு நம்பிக்கை தந்த ஒருவர். அவரினால் நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களை சரி செய்து இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எங்களை மீட்டெடுக்க முடிந்தது. ஆம், நாம் விரும்பும் அதிரடி ஆட்டம் அவரிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் இடைவெளிகளில் பந்தினை அடித்து  வாய்ப்புக்களை உருவாக்க கூடியவர். எங்களுக்கு ஸ்திரத்தன்மை ஒன்று தேவை, அதனால்தான் நாங்கள் அந்த வீரர்களை வைத்திருக்கின்றோம். ஆம், பாகிஸ்தான் போட்டியில் நாம் எதிர்பார்த்த விடயங்களை இழந்திருந்தோம். தசுனும் ஓட்டங்களை எடுக்கவில்லை, ஆனால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவர் சிறப்பாக செயற்பட்டார். எனவே அனைத்து சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறும் விடயங்களை செய்யக் கூடிய நபர்கள் எமக்குத் தேவை.

கிரிக்கெட் என்பது உங்களுக்கு எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த பெறுபேறுகளை தராத ஒன்று. ஆனால் மெதுவான ஹைதராபாத் ஆடுகளத்தில் 345-350 ஓட்டங்கள் பெற்று மூலம் நாம் ஏமாற்றமடைய முடியாது என நினைக்கிறேன். நாங்கள் எளிதாக அந்த பாகிஸ்தான் அணிவரிசைக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும் என்ற போதிலும் பந்துவீச்சில் ஒழுங்கு இல்லை.

அச்சமின்றி விளையாடும் இந்த அணுகுமுறையினை அனைவரும் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் போட்டியில் நிலையான பெறுபேறுகள் கிடைக்கும். அதேநேரம் எமது முன்னணி பந்துவீச்சாளர்களான துஷ்மன்த சமீர, வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் இல்லாத நிலையில் நாம் எமது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மகீஷ் தீக்ஷனவும், வனிந்து ஹஸரங்கவும் விடயங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டவர்கள். தீக்ஷன உபாதையில் இருந்து மீண்டிருப்பது நல்ல அறிகுறி. பந்துவீச்சு சார்ந்த  இந்த விடயங்களையே நாம் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<