கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ண போட்டிகளுக்கான கூட்டு தகுதிகாண் முதல் சுற்றின் 2 ஆம் கட்டப் போட்டிக்கு மக்காவு தனது தேசிய அணியை இலங்கைக்கு அனுப்பாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த செய்தி மக்காவு கால்பந்து சம்மேளனத்தின் (MFA) உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
“ஜுன் 11 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் போட்டிக்காக இலங்கைக்கு தமது தேசிய அணியை அனுப்பாமல் இருக்க MFA தீர்மானித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காவு அணிக்கு பதில்கொடுக்க தயாராகும் இலங்கை கால்பந்து அணி
மக்காவுவில் நடைபெற்ற இதன் முதல் கட்டப் போட்டியில் இலங்கை கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதன் இரண்டாம் கட்டப்போட்டி எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு சுகததாச அரங்கில் நடைபெறவிருந்தது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலேயே மக்காவு கால்பந்து சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பொதுவான மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்த அது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அணியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பொதுவான நாடு (மைதானம்) ஒன்றில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு பிஃபா, AFC மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் (FFSL) நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். எவ்வாறாயினும் இந்த தரப்புகளுக்கு இடையில் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், FFSL மூலம் போட்டி இடம் திட்டமிட்டபடி நடத்தப்படவுள்ளது.
MFA எமது வீரர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும். இலங்கையில் அணியின் பாதுகாப்பை எம்மால் உறுதி செய்ய முடியாத நிலையில் எமது வீரர்களின் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் முயற்சியை எம்மால் எடுக்க முடியாது.
இது ஒரு இலகுவான முடிவு இல்லை என்பதை தயவுடன் கருத்தில் கொள்ளவும். இந்த முடிவை எடுப்பதற்கு MFA தீவிர ஆலோசனை நடத்தியது. இந்த விடயம் குறித்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நாம் மனப்பூர்வமாக நம்புகிறோம், நன்றி” என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இது பற்றி எந்த கருத்தும் வெளியிட்டிருக்கவில்லை.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<




















