தென்னாபிரிக்க முன்னணி வீரருக்கு கொரோனா தொற்று

161

நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இன்கிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிசியின் ஒருநாள் சுப்பர் லீக்கின் ஓர் அங்கமாக நெதர்லாந்து அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், முதலாவது போட்டி நாளை மறுதினம் (26) சென்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இன்கிடிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தவும், அணியில் இருந்து வெளியேற்றவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதியாக கடந்த ஜூலை மாதம் அயர்லாந்துடனான T20i தொடரில் விளையாடிய பிறகு லுங்கி இன்கிடி தென்னாபிரிக்க அணியில் இடம்பெறவில்லை. இதில் இலங்கை சுற்றுப்பயணத்தை சொந்தக் காரணங்களுக்காகத் தவறவிட்டார்.

இதனிடையே, T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் அவர் இடம்பெற்றாலும் எந்தவொரு போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுஇவ்வாறிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட லுங்கி இன்கிடிக்குப் பதிலாக ஜுனியர் டாலா தென்னாபிரிக்க அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, நெதர்லாந்து அணிக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க அணியில் டெம்பா பவுமா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், ககிஸோ ரபாடா உள்ளிட்ட 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், தென்னாபிரிக்கா அணியை கேசவ் மஹராஜ் வழிநடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<