ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணிக்கு என்ன நடந்தது?

Lanka premier League 2021

1536
LPL

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடிவரும் மேலும் ஒரு அணியின் ஒப்பந்தம் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீக்கப்பட்டுள்ள அணி தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகாத போதும், வடக்கை பிரதிநிதித்துவப்படுத்திய ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணியே, இவ்வாறு ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்படும் ஹரிஸ் சொஹைல்

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் LPL தொடரின் சம்பியன் கிண்ணத்தை ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணி வெற்றிக்கொண்டிருந்தது. இந்த அணியின் உரிமையாளர்களாக இந்தியா மற்றும் இலங்கையில் பிறந்து தற்போது, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்து வரும் பல்வேறு தரப்பினர் உரிமையாளர்களாக இருந்தனர்.

தற்போது, LPL  தொடரிலிருந்து வெளியேற்றப்படும் மூன்றாவது அணியாக ஜப்னா ஸ்டல்லியன்ஸ் அணி மாறியுள்ளது. இதற்கு முன்னர், LPL உரிமைத்தை பெற்றுள்ள ஐ.பி.ஜி. குழுமம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் வெளியேற்றப்படுவதாக அறிவித்திருந்தனர். குறித்த இந்த மூன்று அணிகளும், கிரிக்கெட் சபை மற்றும் ஐ.பி.ஜி. குழுமத்தின் நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்காத காரணத்தால், நீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எட்டு புதிய உரிமையாளர்கள் LPL தொடருடன் இணைவதற்கு தயாராக இருப்பதாகவும், உரிமையாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து ஐசிசி அனுமதி வழங்குவதற்காகவே ஏற்பாட்டாளர்களான ஐ.பி.ஜி. குழுமம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LPL தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள் இம்மாதம் 30ம் திகதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 22ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் கடந்த பருவகாலத்தில் கொழும்பு கிங்ஸ், ஜப்னா ஸ்டல்லியன்ஸ், தம்புள்ள வைகிங், கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…