2026 T20 உலகக் கிண்ணத் தொடருக்காக LPL 2025 ஒத்திவைப்பு

28
ICC WORLD T20 2026

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 – 2025 தொடரானது நடைபெறாது என அறிவித்துள்ளது.

>>ஹொங்கோங் சிக்ஸ் 2025: இலங்கை குழாம் வெளியீடு<<

2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரினை நடத்துகின்றன. இந்த நிலையில்  2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை, மைதானங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை தயார் செய்யும் நோக்கில் 2025ஆம் ஆண்டின் LPL T20 தொடரானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. (ICC) இன் வழிகாட்டுதல்களின்படி, 20 அணிகள் பங்கேற்கும் சர்வதேச தொடரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, அனைத்து மைதானங்களும் குறைபாடற்ற நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபை 2025 LPL தொடரை மிகவும் பொருத்தமான கால இடைவெளிக்கு மாற்றுவது என முடிவு செய்துள்ளது. இதன் மூலம், உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக மைதானத் தயார் நிலையை உறுதி செய்வதில் முழுக் கவனம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராகும் சஹீன் அப்ரிடி<<

அத்துடன் T20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை கிரிக்கெட் சபை மூலம் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  • பார்வையாளர் ஆசனங்களை மேம்படுத்துதல் மற்றும் தரமுயர்த்தல்.
  • வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள் மற்றும் பயிற்சிப் பகுதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல்.
  • சர்வதேச ஒளிபரப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல்.
  • சர்வதேச ஊடகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊடக மைய உள்கட்டமைப்பை உயர்த்துதல்.
  • T20 உலகக் கிண்ணம் போன்ற பல்நாட்டு தொடர்களுக்கான பொதுவான மைதானத் தேவைகளைத் தரம் உயர்த்துதல்.

அதேநேரம் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் 11 ஆட்டங்களை நடத்துவதற்காக அதன் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இங்கு மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்தவுடன் T20 உலகக் கிண்ணத்திற்கான மேம்படுத்தல் பணிகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<