2026 மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி லோர்ட்ஸில்

2026 Women's T20 World Cup

8
2026 Women's T20 World Cup

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த அத்தியாயம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி முதல் ஜுலை 5ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (01) அறிவித்துள்ளது.

12 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 33 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ட்ராஃபோர்ட், ஹெட்டிங்லே, எட்ஜ்பாஸ்டன், தி ஓவல், ஹாம்ப்ஷையர் பவுல் மற்றும் பிரிஸ்டல் கவுன்டி உட்பட மொத்தம் 7 மைதானங்களில் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

மேற்கொண்டு இத்தொடரானது இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட நொக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி குழு A மற்றும் குழு B என இரு பிரிவுகளிலும் தலா 6 அணிகள் இடம்பிடிக்கவுள்ளன. அதேசமயம், இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் நடப்புச் சம்பியன் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா, ‘2026 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத்தை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, மைதானங்களின் உறுதிப்படுத்தல் ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறிக்கிறது. இந்த தொடரானது உலகின் சிறந்த வீராங்கனைகளை திறமை, மனப்பான்மை மற்றும் விளையாட்டுத் திறனைக் கொண்டாட ஒன்றிணைக்கும் என்று நம்புகிறேன். ஐக்கிய இராச்சியம் வளமான பன்முகத்தன்மை எப்போதும் அனைத்து அணிகளுக்கும் மிகுந்த ஆதரவைக் காட்டியுள்ளது என தெரிவித்தார்.

அத்துடன், கடந்த கால நிகழ்வுகளில் இதை நாம் மிகவும் மறக்கமுடியாத வகையில் கண்டோம். கடந்த 2017ஆம் ஆண்டு லோர்ட்ஸில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப்போட்டி, மகளிர் கிரிக்கெட்டின் எழுச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது, அதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு இதைவிட பொருத்தமான மைதனான் வேறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 2020ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியை 86,174 பேர் கண்டுகளித்தனர். மேலும், 2023ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் டிக்கெட்டுகளும் விரைவில் விற்றுத்தீர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<