தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக ஜனாதிபதி றக்பி கிண்ணத்தை வென்ற இஸிபத்தன கல்லூரி

 Dialog Schools Rugby Knockouts 2025

5
Isipathana College

இலங்கை பாடசாலைகள் றக்பி சங்கம் ஏற்பாடு செய்த 19 வயதுக்குட்பட்ட டயலொக் ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் றக்பி தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு இஸிபத்தன கல்லூரி சம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியனான கண்டி திரித்துவ கல்லூரியை 12-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இஸிபத்தன வீரர்கள் இந்த ஆண்டின் சம்பியன் பட்டத்தை தனதாhக்கிக் கொண்டனர். இஸிபத்தன கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஜனாதிபதி றக்பி கிண்ணத்தை வென்று சாதனை படைத்ததுடன், றக்பி நொக் அவுட் போட்டித் தொடரொன்றில் தமது 15ஆவது சம்பியன் பட்டத்தையும் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது தவிர, இஸிபத்தன கல்லூரி ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் றக்பி தொடரி;ன் இறுதிப் போட்டியில் விளையாடிய 29ஆவது முறை இதுவாகும், மேலும் அவர்கள் சம்பியன் பட்டம் வென்ற 13ஆவது சந்தர்ப்பமும் இதுவாகும். அதுமாத்திரமின்றி, இஸிபத்தன கல்லூரி ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் றக்பி தொடரின் இறுதிப் போட்டியில் திரித்துவ கல்லூரியைத் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது சந்தர்ப்பமும் இதுவாகும். முன்னதாக 2012ஆம் ஆண்டில் திரித்துவ கல்லூரியை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் இஸிபத்தன கல்லூரி 07-06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. முதல் பாதியில் இஸிபத்தன கல்லூரி கோலொன்றைப் பெற்றுக்கொண்டதுடன், திரித்துவ கல்லூரி இரண்டு பெனால்டி உதைகளைப் பதிவுசெய்தது.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில், இஸிபத்தன கல்லூரி சார்பாக ஆதித்ய மதுஷான் வைத்த ட்ரையை சவிஷ்க ஹிரான் வெற்றிகரமாக கோலாக மாற்றினார், இதுவே இந்தப் போட்டியில் பதிவான ஒரேயொரு கோல் இதுவாகும். போட்டியின் 13ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் திரித்துவ கல்லூரிக்காக ஷான் அல்தாஃ;ப் இரண்டு பெனால்டி உதைகளை கோலாக மாற்றினார்.

போட்டியின் இரண்டாம் பாதி மிகவும் சூடுபிடித்தது. 61வது நிமிடம் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. எனினும், 61ஆவது நிமிடத்தில் ஷான் அல்தாஃப் ஒரு அற்புதமான டிராப் கோலைப் போட்டு திரித்துவ கல்லூரியை 9-7 என முன்னிலைப்படுத்தினார். இருப்பினும், போட்டியின் உபாதையீடு நேரத்தின் போது இஸிபத்தன கல்லூரிக்காக யுவிந்து கொடிதுவக்கு ட்ரையொன்றை வைத்து 12-09 என்ற கணக்கில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதன்படி, 2011ஆம் ஆண்டு ஜனாதிபதி றக்பி கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, திரித்துவ கல்லூரி, நான்காவது தடவையாக ஜனாதிபதி றக்பி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இதேவேளை, நேற்று முன்தினம் ஹெவ்லாக் மைதானத்தில் நடைபெற்ற பிரதமர் கிண்ணம் மற்றும் தலைவர் கிண்ண இறுதிப் போட்டிகளில் முறையே கொழும்பு ஆனந்தா கல்லூரியும், மஹரகம மத்திய கல்லூரியும் சம்பியன் பட்டத்தை வென்றன.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<