லாவோசுடனான இரண்டாவது மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

198

இலங்கை மற்றும் லாவோஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நட்புறவு கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி மற்றும் 2023 AFC ஆசிய கிண்ணப் போட்டிக்கான பூர்வாங்க தகுதிகாண் சுற்றுப் போட்டிக்கான ஒரு பயிற்சி தொடராகவே இலங்கை அணி லாவோஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட நட்புறவு தொடரில் ஆடியது.  

உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இறுதி குழாம் அறிவிப்பு

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்………

கடந்த மே 28 ஆம் திகதி நடைபெற்ற லாவோஸுக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை (மே 31) இரண்டாவது நட்புறவுப் போட்டியில் ஆடியது.

போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணி வீரர்கள் சில ப்ரீ கிக் வாய்ப்புகளை வீணாக்கியதோடு மறுபுறம் லாவோஸ் வீரர்கள் நேர்த்தியாக பந்தை கடத்தி நெருக்கடி கொடுத்ததை காணமுடிந்தது.

எனினும், முதல் போட்டி போலின்றி இலங்கை மத்திய கள வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர். அவர்களுடன் இலங்கையின் மூன்று முன்கள வீரர்களும் லாவோஸ் தற்காப்பு அரணுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.  

இதனால் முதல் 45 நிமிடங்களில் இலங்கை அணியினர் சிறந்து செயற்பட்டனர். இலங்கை 8 கோணர் வாய்ப்புகளை பெற்றபோதும் வாய்ப்புகள் தவறவிடப்பட்ட நிலையில் முதல் பாதி கோலின்றி முடிவுற்றது.

முதல் பாதி – இலங்கை 0 – 0 லாவோஸ்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் ஹர்ஷ பெர்னாண்டோ எல்லைக்கு வெளியில் இருந்து வீசிய பந்து (Throw ball) எதிரணி பின்கள வீரர் தின்னகோனே வொன்காவின் பக்கம் செல்ல அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தலையில் பட்டு ஓன் கோலாக மாறியது. இதன்மூலம் இலங்கை 1-0 என போட்டியில் முன்னிலை பெற்றது.  

ஐரோப்பிய லீக் சம்பினாக முடிசூடிய செல்சி

ஈடன் ஹசார்ட்டின் இரட்டை கோல் மூலம் ஆர்சனல் கழகத்தை 4-1……..

இளம் வீரர் மொஹமட் ஆகிப் இலங்கை தேசிய அணிக்காக தனது முதல் போட்டித் தொடரில் களமிறங்கிய நிலையில் மற்றொரு பாடசாலை வீரரான ஷபீர் ரசூனியா 67 ஆவது நிமிடத்தில் மதுஷான் டி சில்வாவுக்கு பதில் களமிறங்கியதன் மூலம் இலங்கை அணிக்கு முதல் முறை ஆட சந்தர்ப்பம் பெற்றார்.

இந்நிலையில் 69 ஆவது நிமிடத்தில் சுஜான் பெரேரா நீண்ட தூரத்திற்கு உதைந்த பந்தை பெற்ற மொஹமட் ஆகிப் 30 மீற்றர் தொலைவில் இருந்து லாவோஸ் கோல்காப்பாளரின் கைகள் ஊடாக பந்தை வலைக்குள் புகுத்தினார்.

இதன்மூலம் இலங்கை அணி வலுவான நிலையை பெற்றிருந்தது. ஏற்கனவே இடம்பெற்ற முதல் போட்டியிலும் ஆகிப் இலங்கை அணிக்காக ஒரு கோல் போட்டு, தனது கன்னி சர்வதேச கோலைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜூட் சுமன் லாவோஸ் முன்கள வீரரை கோல் பரப்பில் வைத்து கீழே வீழ்த்தி இழைத்த தவறின் மூலம் லாவோஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி முதல் கோலை புகுத்தியது.  

குறிப்பாக மொஹமட் ஆகிப் நடுவருடன் வாக்குவாதப்பட்டு இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கோல் பெற்ற பின் தனது டீ சேர்ட்டை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அவர் முதல் மஞ்சள் அட்டையை பெற்றிருந்தார்.

போட்டி கடைசி நிமிடங்களை எட்டும்போது இலங்கை தனது பின்களத்தை பலப்படுத்தியபோதும் 93 ஆவது நிமிடத்தில் லவோஸ் தனது இரண்டாவது கோலை புகுத்தி போட்டியை சமநிலை செய்தது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது நட்புறவுப் போட்டியில் இலங்கை அணி 12 ஆவது நிமிடத்திலேயே மொஹமட் ஆகிப் மூலம் கோல் பெற்று முன்னிலை பெற்றபோது லாவோஸ் அணி கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது

முழு நேரம் – இலங்கை 2 – 2 லாவோஸ்

கோல் பெற்றர்வர்கள்

இலங்கை – தின்னகோனே வொன்கா (ஓ.கோ.) 50′, மொஹமட் ஆகிப் 70′
லாவோஸ் – சுகாபோன் 83′, 92′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<