T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய சந்தகன்

235
BCCI

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய T20 பந்துவீச்சாளர்கள் வரிசையில், இலங்கை அணியின் லக்ஷான் சந்தகன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார்.

நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை அடுத்து ஐ.சி.சி. T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையினை வெளியிட்டிருக்கின்றது.

தொடரும் துரதிஷ்டங்களால் வாய்ப்புகளை இழக்கும் வருண் சக்கரவர்த்தி?

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில் சைனமன் பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தான் வெளிப்படுத்திய அசத்தல் பந்துவீச்சினை அடுத்தே முன்னேற்றம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷான் சந்தகன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் 6 விக்கெட்டுக்களை மொத்தமாக கைப்பற்றியிருந்ததோடு, இந்த விக்கெட்டுக்களின் துணையுடன் தற்போது 09 இடங்கள் முன்னேறி ஐ.சி.சி. இன் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 10ஆம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இதேநேரம், T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல்வீரரான ரஷீட் கான் காணப்பட, தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் சம்ஷி இரண்டாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய சுழல்வீரர் முஜிபுர் ரஹ்மான் மூன்றாம் இடத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ICC யின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரரானார் அஷ்வின்

இதேநேரம், நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரில் சிறந்த பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்த அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்டன் ஏகார் 04 இடங்கள் முன்னேறி, தற்போது 04ஆம் இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான ஆதில் ரஷீட், ஐ.சி.சி. இன் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 05ஆம் இடத்தில் காணப்படுகின்றார். 06ஆம் இடத்தினை அவுஸ்திரேலிய வீரரான அடம் ஷம்பா பெற்றுள்ளார்.

இவர்கள் தவிர ஐ.சி.சி. இன் T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முறையே 07ஆம், 08ஆம், 09ஆம் இடங்களில் நியூசிலாந்து அணியின் மிச்செல் சான்ட்னர், இஸ் சோதி மற்றும் டிம் செளத்தி ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதோடு, புதிதாக வெளியிடப்பட்டுள்ள T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு …