பிக் பாஷ் லீக் தொடரின் புதிய சம்பியன்களாக மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி

229
Getty Images

எட்டாவது தடவையாக இடம்பெற்று முடிந்திருக்கும் இந்தப்பருவகாலத்திற்கான பிக் பாஷ் லீக் (BBL) T20 தொடரின் இறுதிப் போட்டியில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி, மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியை 13 ஓட்டங்களால் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அவுஸ்த்திரேலியாவின் எட்டு பிராந்தியங்களை குறிக்கும் எட்டு அணிகள் பங்குபெறும் இந்த T20 தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

இந்த பிக் பாஷ் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி மற்றும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி ஆகியவை முன்னதாக தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் முறையே சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி  ஆகியவற்றை தோற்கடித்திருந்தன.

இதன் பின்னர் இன்று (17) மெல்பர்ன் டோக்லன்ட் மைதானத்தில் இறுதிப் போட்டி ஆரம்பமானது. இந்தப் பருவகாலத்திற்கான பிக் பாஷ் லீக் T20 தொடரில் நாணய சுழற்சிற்கு பதிலாக துடுப்பு மட்டை சுழற்சி பயன்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் இறுதிப் போட்டியின் துடுப்புமட்டை சுழற்சியில் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணித்தலைவர் கிளேன் மெக்ஸ்வேல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு வழங்கினார்.

இதனை அடுத்து துடுப்புமட்டை சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. இவ்வாறாக அவ்வணி ஒரு கட்டத்தில் 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்ற போது டோம் கூப்பர் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் இணைந்து நிதானம் கலந்த அதிரடியுடன் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர்.

மொத்தமாக 80 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ரெனகேட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் இந்த இணைப்பாட்டத்திற்கு உதவியாக இருந்த டோம் கூப்பர் 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களைப் பெற, டேனியல் கிறிஸ்டியன் 30 பந்துகளில் 38 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜேக்சன் பேர்ட், அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 146 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்க துடுப்பாட்ட வீரர்களான பென் டங்க் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 93 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதனால்,  வெற்றி இலக்கை எட்டும் பயணத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி நல்ல நிலையிலேயே காணப்பட்டிருந்தது.

எனினும், அவ்வணியின் முதல் விக்கெட்டாக மார்கஸ் ஸ்டோனிஸ் 39 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஸ்டோனிஸின் விக்கெட்டோடு மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் சரிவும் ஆரம்பித்தது. புதிய துடுப்பாட்ட வீரராக வந்த பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் ஓட்டமேதுமின்றி வெளியேற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஏற்கனவே ஸ்டோனிஸ் உடன் சேர்ந்து இணைப்பாட்டம் உருவாக்கிய பென் டங் அரைச்சதம் ஒன்றைப் பெற்ற  பின்னர் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி கடைசியில் 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்திருந்த பென் டங், 45 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ரெனகேட்ஸ் அணியின் பந்துவீச்சில் தமது அணி சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்த கெமரோன் போய்ஸ், டேனியல் கிறிஸ்டியன் மற்றும் கிறிஸ் ட்ரமெயின் ஆகியோர் தலா 2  விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி வீரர் டேனியல் கிறிஸ்டியனிற்கு கொடுக்கப்பட்டது.

போட்டிச் சுருக்கம்

மெல்பர்ன் ரெனகேட்ஸ் – 145/5 (20) டோம் கூப்பர் 43(35), டேனியல் கிறிஸ்டியன் 38(30), ஜேக்சன் பேர்ட் 25/2(3), அடம் ஷம்பா 21/2(4)

மெல்பர்ன் ஸ்டார்ஸ் – 132/7 (20) பென் டங்க் 57(45), மார்கஸ் ஸ்டோனிஸ் 39(38), கிறிஸ் டெரைன் 21/2(4), கெமரோன் போய்ஸ் 30/2(4), டேனியல் கிறிஸ்டியன் 33/2(4)

முடிவு – மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி